சென்னை, கோவைக்கு இடையே சரக்கு ரெயில் சேவை 25-ந் தேதி வரை நீட்டிப்பு

சென்னைக்கும், கோவைக்கும் இடையே சரக்கு ரெயில் சேவை வருகிற 25-ந் தேதி வரை நீட்டிப்பு செய்து சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்,
கோவைக்கும், சென்னைக்கும் இடையே சரக்கு ரெயில் சேவை நாளை(செவ்வாய்க்கிழமை) வரை அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது வருகிற 25-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து கோவைக்கு வருகிற 15-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை சரக்கு ரெயில் சேவை சேலம் ரெயில்வே கோட்டத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு காட்பாடிக்கு 10.40 மணிக்கும், ஜோலார்பேட்டைக்கு மதியம் 12.35 மணிக்கும், கருப்பூருக்கு 3.40 மணிக்கும், சேலத்துக்கு மாலை 4 மணிக்கும், ஈரோட்டுக்கு 5.25 மணிக்கும், திருப்பூருக்கு 6.45 மணிக்கும் ரெயில் வரும். பின்னர் இரவு 8.30 மணிக்கு அந்த ரெயில் கோவை சென்று சேருகிறது.
இதுபோல் கோவையில் இருந்து சென்னைக்கு 15-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை சரக்கு ரெயில் இயக்கப்படுகிறது. அந்த ரெயில் கோவையில் அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு திருப்பூருக்கு 6 மணிக்கும், ஊத்துக்குளிக்கு 6.20 மணிக்கும், ஈரோட்டுக்கு 8.20 மணிக்கும், சேலத்துக்கு 9.40 மணிக்கும், கருப்பூருக்கு 10.30 மணிக்கும், ஜோலார்பேட்டைக்கு மதியம் 12.40 மணிக்கும் செல்கிறது. அந்த ரெயில் சென்னைக்கு மாலை 4 மணிக்கு சென்று சேருகிறது.
கொரோனா பாதிப்பை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் முககவசம், மருத்துவ உபகரணங்கள், உணவுப்பொருட்கள் கொண்டு செல்வதற்கு வசதியாக இந்த ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அரசு அதிகாரிகள், தொழில்துறையினர், தனியார் மற்றும் தொண்டு அமைப்பினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு முன்பதிவு மையங்கள் அந்தந்த ரெயில் நிலையங்களில் செயல்படுகிறது. திருப்பூர் ரெயில் நிலையத்தை 96009 56238 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story