தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கொரோனா இறப்பு விகிதம் குறைவு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி


தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கொரோனா இறப்பு விகிதம் குறைவு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
x
தினத்தந்தி 13 April 2020 3:00 AM IST (Updated: 13 April 2020 2:51 AM IST)
t-max-icont-min-icon

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை, 

மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் உலக தமிழ் சங்க கட்டிட வளாகத்தில் நடந்தது. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமை தாங்கினார். கலெக்டர் வினய், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, மாணிக்கம், சரவணன், பெரியபுள்ளான், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன், மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் சங்குமணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மொத்தமாக கொரோனா நோய் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 969. அதில் மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை 25 பேரில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். முதல்-அமைச்சர் அறிவுரையின்படி சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை என பல்வேறு துறையினர் பணியினை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் இறப்பை ஒரு சதவீதமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருப்பது தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு சான்றாகும். நோயை தடுக்கும்பட்சத்தில் வீடு, வீடாக கட்டுப்படுத்தும் திட்டத்தில் 33 ஆயிரம் பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள்.

நாளொன்றுக்கு ஏறத்தாழ 10 ஆயிரம் காய்கறிகள் மற்றும் பழங்கள் தொகுப்பு பைகளை மக்களிடையே சேர்ப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொகுப்பு பைகளை மக்களிடையே சேர்த்திருப்பது பாராட்டுக்குரியது. தமிழக அரசின் சார்பில் தேசிய பேரிடர் மீட்பில் இருந்து ரூ.1000 கோடி நிவாரணம் கோரப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திற்கு ஏற்கனவே 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் நிதி பற்றாக்குறை இல்லை. மதுரையில் பல்வேறு சங்கங்கள் கொடுக்கக்கூடிய கோரிக்கைகள் எல்லாம் முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்திருந்தனர்.

Next Story