ஈரோட்டில் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம்: வீடுகளிலேயே பூஜை செய்து வழிபாடு
ஈரோட்டில் தமிழ்ப்புத்தாண்டையொட்டி வீடுகளிலேயே பூஜை செய்து பொதுமக்கள் கொண்டாடினார்கள்.
ஈரோடு,
தமிழ்ப்புத்தாண்டு நேற்று கொண்டாடப்பட்டது. பொதுவாக புத்தாண்டு தினத்தில் பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து தங்கள் புதிய ஆண்டினை புத்துணர்ச்சியுடன் வரவேற்பார்கள். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கோவில்கள் அனைத்தும் நடை சாத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் கோவில்களுக்கு செல்ல முடியவில்லை. எனினும் வீட்டு பூஜை அறைகளிலேயே பூஜை செய்து பொதுமக்கள் புத்தாண்டினை கொண்டாடினார்கள்.
சாமிக்கு பழங்கள், பணம், வெற்றிலை பாக்கு படையல் வைத்து வழிபட்டனர். அவரவர் பாரம்பரிய முறைப்படி தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. காலையிலேயே நீராடி, நல்ல ஆடைகள் அணிந்து வீட்டின் முன்பு கோலமிட்டு, விளக்கு ஏற்றி பலரும் உற்சாகமாக கொண்டாடினார்கள். ஊரடங்கு நிலையில் போதிய வருமானமின்றி தவிக்கும் குடும்பத்தினர் புத்தாண்டு தினத்தையொட்டி ஆடம்பரமின்றி வீட்டில் பூஜை செய்தனர். பெரியவர்கள் குழந்தைகளுக்கு வாழ்த்து கூறி ஆசி அளித்தனர்.
சில வீடுகளில் தங்கள் வீட்டையொட்டி வெளியில் வைத்திருக்கும் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். ஈரோடு சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டு வாசலில் வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைக்கு பூஜை செய்து கனிகள் படைத்து சித்திரையை வரவேற்றனர்.
வழக்கமாக புத்தாண்டு தினத்தில் கூட்டமாக இருக்கும் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், திண்டல் முருகன் கோவில், சக்தி விநாயகர் கோவில், செல்வ விநாயகர் கோவில், வலம்புரி விநாயகர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் நேற்று வெறிச்சோடி இருந்தன. கோவில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்தனர்.
Related Tags :
Next Story