ஈரோடு மாவட்டத்தில் மளிகை கடைகளுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு


ஈரோடு மாவட்டத்தில் மளிகை கடைகளுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 April 2020 4:00 AM IST (Updated: 16 April 2020 1:22 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் மளிகை கடைகளுக்கு வாரத்தில் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று கலெக்டர் சி.கதிரவன் அறிவித்து உள்ளார்.

ஈரோடு, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை நேரத்தில் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மளிகை கடைகள், காய்கறி மார்க்கெட்டுகள், பால் விற்பனை நிலையங்கள் போன்றவை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

சில கடைகளில் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது. ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் பொதுமக்கள் நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கி சென்றனர். மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க தினமும் பொதுமக்கள் வெளியே வந்த வண்ணம் உள்ளனர். எனவே வாரத்தில் 3 நாட்களுக்கு மளிகை கடைகளுக்கு விடுமுறை அளித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறிதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி பேக்கரிகள் திறக்க தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மளிகைக்கடை, காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் தினமும் வந்து பொருட்களை வாங்கி செல்கிறார்கள். அங்கு சமூக இடைவெளி கடைபிடிப்பதில் கவனம் செலுத்துவதில்லை.

அத்தியாவசிய பொருட் களை வாங்க வேண்டுமென்ற காரணத்தை கூறி தினமும் சிலர் வெளி வருகிறார்கள். எனவே பொதுமக்கள் தினமும் கடைகளுக்கு செல்வதை தவிர்க்க ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை என வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு முடியும் வரை நடைமுறையில் இருக்கும். பொதுமக்கள் முன்எச்சரிக்கையாக தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்து கொள்ளவும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

Next Story