திருப்பூரில் வீட்டில் மதுவை பதுக்கி வைத்து விற்றவர் கைது - 277 பாட்டில்கள் பறிமுதல்
திருப்பூரில் வீட்டில் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 277 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-
திருப்பூர்,
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு முதல் ரெயில்வேகேட் அருகே கொடிக்கம்பம் பகுதியில் ஒரு வீட்டின் பின்பகுதியில் வைத்து மது விற்பனை நடப்பதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் அந்த வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட பாப்பண்ணன் நகரை சேர்ந்த நாகேந்திரன் (வயது 35) என்பவரை பிடித்தனர். அவரிடம் இருந்து 277 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் திருப்பூர் பி.என்.ரோடு சாந்தி தியேட்டர் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கியதாகவும், ரூ.120 விலையுள்ள ஒரு மது பாட்டிலை ரூ.500-க்கு விற்பனை செய்ததாகவும் நாகேந்திரன் கூறினார்.
இதைத்தொடர்ந்து நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையின் விற்பனையாளர், மேற்பார்வையாளர் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story