கொரோனா தொற்றை கண்டறிய விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் வசதி
கொரோனா தொற்றை கண்டறியும் மருத்துவ உபகரணம் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளதாக கலெக்டர் கண்ணன் தெரிவித்தார்.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கண்ணன் தலைமையில், கைத்தறி துணி நூல்துறை இயக்குனர் கருணாகரன், தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதைதொடர்ந்து கலெக்டர் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 3869 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 3802 பேருக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய நாட்களை முடித்து வெளியே வர அனுமதிக்கப்படுவர்.
17 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு மதுரையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 43 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் ராஜபாளையத்தில் 4 பேருக்கும், அருப்புக்கோட்டையில் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு மதுரையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜபாளையத்தில் கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட 4 பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 26 பேரின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் முழுவதுமே தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக ஆய்வு நடத்தப்பட்டது. நகர் முழுவதும் 1,72,000 பேர் விசாரிக்கப்பட்டதில் 882 பேருக்கு காய்ச்சல், சளி, இருமல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ராஜபாளையம் பகுதியில் பாதிப்புள்ள 6 வார்டுகள் மட்டும் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும்.
மாவட்டத்தில் வெளி மாநிலத்தில் இருந்து வந்து வேலை பார்த்த 4831 பேர் சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏதேனும் தேவை இருப்பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்போர், பதுக்கல் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு வந்த புகாரின் அடிப்படையில் ராஜபாளையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 4 கடைகள் பொருட்களை அதிக விலைக்கு விற்றதாக தெரிய வந்ததன் பேரில் அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பதையும் பொருட்களை பதுக்குவதையும் தவிர்த்து சேவை மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மாவட்டத்தில் 98.2 சதவீத ரேஷன்அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவிதொகை வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ளவர்களுக்கும் ஓரிரு நாளில் வழங்கப்பட்டு விடும். 90 சதவீதம் பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளோருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றை கண்டறிவதற்கான மருத்துவ உபகரணம் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளது. இதற்கான சில உதிரி பாகங்கள் மும்பையில் இருந்து வர வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் புதன் கிழமையில் இருந்து விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியிலேயே கொரோனா தொற்று சோதனை நடத்தப்படும். ரேப்பிட் கிட் என்ற உபகரணமும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கையின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் உள்ளது. இந்த மாவட்ட மக்கள் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு கொடுத்தால் மாவட்டம் பச்சை மண்டலத்தில் இடம்பெற வாய்ப்பு ஏற்படும். அதற்கு மாவட்ட மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story