தாளவாடி அருகே வனப்பகுதியில் ரோட்டை கடந்த யானைகள் - ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்த வாகன ஓட்டிகள்
தாளவாடி அருகே வனப்பகுதியில் யானைகள் ரோட்டை கடந்தன. இந்த யானைகளை வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்தனர்.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர்மாளம் ஆகிய வனச்சரகங்களில் ஏராளமான யானைகள் உள்ளன. இதில் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியாகும். இந்த ரோட்டில் மலை கிராம மக்கள் இருசக்கர வாகனம், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகிறார்கள்.
இந்த ரோட்டை யானைகள் அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் ஒருவித அச்சத்துடனே செல்வார்கள். யானை கடந்து செல்வதை பார்த்தாலே வாகனங்களில் செல்பவர்கள் தூரமாக நிறுத்திவிட்டு, யானைகள் அனைத்தும் கடந்து சென்ற பிறகே புறப்பட்டு செல்வார்கள்.
இந்தநிலையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், தலமலை வழியாக இயக்கப்படும் பஸ்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கார், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது. போக்குவரத்து குறைந்ததால் வனவிலங்குகள் எந்தவித இடையூறும் இல்லாமல் ‘ஹாயாகா’ உலா வருகின்றன.
நேற்று காலையில் சிக்கள்ளி அருகே தாளவாடி-தலமலை ரோட்டில் யானைக்கூட்டம் மெதுவாக ரோட்டை கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக சென்றனர். யானைக்கூட்டம் ரோட்டை கடப்பதை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை திருப்பியவர்கள், அங்கிருந்து உடனடியாக செல்லாமல் வரிசையாக ரோட்டை கடந்த யானைகளை நின்று வேடிக்கை பார்த்தார்கள். அதில் ஒருவர் தனது செல்போனை எடுத்து யானைகளை புகைப்படம் எடுத்தார். யானைகள் கடந்து சென்ற பிறகு, அவர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
வனப்பகுதியில் யானைகளை புகைப்படம், வீடியோ எடுக்கக்கூடாது என்று வனத்துறையினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “யானைகள் தீவனத்தை தேடி ஒரு இடத்தில் இருத்து மற்றொரு இடத்துக்கு கடந்து செல்கிறது. வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது குற்ற செயலாகும். மேலும், வனவிலங்குகளை புகைப்படம் எடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”, என்றனர்.
Related Tags :
Next Story