கோவையில் தவித்த கூலித்தொழிலாளர்கள் சொந்த கிராமத்திற்கு வந்தனர் - அமைச்சர் பாஸ்கரன் நடவடிக்கை


கோவையில் தவித்த கூலித்தொழிலாளர்கள் சொந்த கிராமத்திற்கு வந்தனர் - அமைச்சர் பாஸ்கரன் நடவடிக்கை
x
தினத்தந்தி 19 April 2020 4:20 AM IST (Updated: 19 April 2020 4:20 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவால் கோவையில் தவித்த கூலித்தொழிலாளர்கள் அமைச்சர் பாஸ்கரனின் முயற்சியால் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிவகங்கை, 

சிவகங்கை அடுத்த தமறாக்கி, ஏ.ஆர்.உசிலம்பட்டி, மணப்பட்டி, கட்டயன்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 32 ஆண்கள், 23 பெண்கள் மற்றும் 9 குழந்தைகள் ஆகியோர் கோவையை அடுத்த தடாகம் என்ற இடத்தில் அமைந்துள்ள 4 செங்கல் சூளைகளில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் அண்மையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அவர்கள் வேலை பார்த்த செங்கல் சூளைகள் மூடப்பட்டன. இதனால் அவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும், உணவின்றியும் சிக்கி தவித்து வந்தனர். அதைதொடர்ந்து அவர்கள் அமைச்சர் பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்து தங்களை சொந்த ஊருக்கு அழைத்துவர உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டனர்.

அதைதொடர்ந்து அவர், கலெக்டர் ஜெயகாந்தனிடம் தகவல் கூறி, கூலித்தொழிலாளர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யும்படி தெரிவித்தார். இதையடுத்து கலெக்டர், சிவகங்கையில் இருந்து ஒரு பஸ்சை அனுப்பி வைத்து அங்கு சிக்கி தவித்த கூலித்தொழிலாளர்களை நேற்று பத்திரமாக மீட்டு சிவகங்கைக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர்களை சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்தனர்.

தொடர்ந்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் அனைவருக்கும் காய்கறி, 5 கிலோ அரிசி மற்றும் முக கவசம் ஆகியவற்றை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, தாசில்தார் மைலாவதி, ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் அதே பஸ்சில் அவரவர் சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story