உடுமலை அரசு ஆஸ்பத்திரி நர்சுக்கு கொரோனா; குடியிருப்பு பகுதிக்கு ‘சீல்’
உடுமலை அரசு ஆஸ்பத்திரி நர்சுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத்தொடர்ந்து அவர் குடியிருந்து வந்த சாலை பகுதி சீல் வைக்கப்பட்டது.
உடுமலை,
உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சளி, இருமல், காய்ச்சல் என்று வருகிறவர்களுக்கு, கொரோனா வைரஸ் இருக்குமோ? என்று சந்தேகிக்கப்படுகிறவர்களுக்கு முதல்கட்ட சிகிச்சையளிக்க அனைத்து வசதிகளுடன் 15 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிறப்பு வார்டில் சிலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரி நர்சு ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ளதாக கண்டறியப்பட்டது. அவர் உடனடியாக கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து உடுமலையில், அந்த நர்சு குடியிருந்து வந்த குடியிருப்பு பகுதிக்கு உடுமலை ஆர்.டி.ஓ.ரவிக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார்,நில வருவாய் ஆய்வாளர் ரஞ்சித், நகராட்சி நகர்நல அலுவலர் (பொறுப்பு) சிவக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் செல்வம், செல்வக்குமார்,ஆறுமுகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளைக்கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து அந்த வீதியின் இரண்டு புறமும் சீல் வைக்கப்பட்டது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பகுதியில் குடியிருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story