ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிப்பு


ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 April 2020 4:45 AM IST (Updated: 22 April 2020 1:33 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு ஊர்களில் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி,

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. வருகிற மே மாதம் 3-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் சாலைகளில் தேவையின்றி நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும். பொது இடங்களில் கூட்டமாக கூடாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தர்மபுரி நகரில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் அதிக அளவில் சென்று வருகிறார்கள். போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி பொது இடங்களில் மக்களின் இயல்பான நடமாட்டம் வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது. பாலக்கோடு பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் காலை நேரத்தில் வழக்கம் போல் கூடும் பொதுமக்கள் எந்தவித சமூக இடைவெளியையும் கடைபிடிக்காமல் காய்கறிகள் வாங்குதல், மளிகை கடைகளில் பொருட்களை வாங்குதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் அரூர், ஏரியூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஊர்களிலும் கடைகள் திறந்து இருந்தது. இதனால் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்து இருப்பது ஊரடங்கு அமலில் உள்ளதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினார்கள். தேவையின்றி சாலைகளில் நடந்து சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இருசக்கர வாகனங்களும் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story