ஈரோட்டில் துணிகரம்; ஜவுளி நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை -பணம் கொள்ளை


ஈரோட்டில் துணிகரம்; ஜவுளி நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை -பணம் கொள்ளை
x
தினத்தந்தி 22 April 2020 5:30 AM IST (Updated: 22 April 2020 1:54 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் ஜவுளி நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை துணிகரமாக கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு, 

ஈரோடு சூளை ஈ.பி.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 43). ஜவுளி நிறுவன உரிமையாளர். இவர் கடந்த 18-ந்தேதி தனது குடும்பத்துடன் மொடக்குறிச்சி அருகே உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

இந்தநிலையில் நேற்று காலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். வீட்டில் இருந்த பொருட்கள் அங்கும், இங்குமாக சிதறிக்கிடந்தன.

மேலும் வீட்டில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 16 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதுபற்றி இளங்கோ ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கைரேகை நிபுணர்களும் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டு வருகிறார்கள்.

ஜவுளி நிறுவன உரிமையாளர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story