வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு வேலைக்கு சென்று வீடு திரும்பியவர்களின் தகவலை தெரிவிக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு
வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு வேலைக்கு சென்று சமீபத்தில் வீடு திரும்பியவர்கள் பற்றிய தகவலை உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டு உள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ள அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு அருளரசு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளால் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
தற்போது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து புதிதாக வரும் நபர்களை கண்காணிக்க வேண்டி உள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 11 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, மாவட்டத்திற்குள் வருவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். லாரிகளில் காய்கறிகள் மற்றும் சரக்குகள் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை. அதேசமயம் லாரிகள், வேன்கள், கன்டெய்னர் லாரிகளில் டிரைவர்கள், உதவியாளர்கள் தவிர வேறு ஏதேனும் நபர்கள் உள்ளார்களா? என்று பார்வையிட வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் மற்றும் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளை சேர்ந்த வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் வேலை செய்த புதிய நபர்கள் சமீபத்தில் வீடு திரும்பி உள்ளார்களா? என்று தகவல் அறிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு திரும்பியவர்களின் தகவல் அடிப்படையில், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் வெளிமாநிலங்களில் ரிக் தொழிலில் ஈடுபட்டு வருவதால், அவர்கள் வீடு திரும்பிய நிலையில் விவரங்களை சேகரிக்கவில்லை என்றால் நோய் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இவர்கள் உடல்நிலை நன்றாக உள்ளது என்று கருதக்கூடாது. அவர்களால் அவர்களின் வீடுகளில் உள்ள முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.
ஊரடங்கு அமல் படுத்துவதில் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்கள் இருசக்கர வாகனங்களில் ஒரு நபருக்கு மேல் செல்ல அனுமதிக்க கூடாது. வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியில் வரும்போது முககவசம் இன்றி வெளியே வரவும் அனுமதிக்ககூடாது. இவ்வாறு வெளியில் வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
முன்னதாக கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவ டிக்்கைகளுக்காக முதல் -அமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்கள் ஒரு மாத ஊதியத்்தை வழங்கிய ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன், திருச்செங்கோடு தாசில்தார் கதிர்வேல் ஆகியோருக்கு அனைத்து அலுவலர்களும் கைத்தட்டி பாராட்டு தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, உதவி கலெக்டர்கள் கோட்டைகுமார், மணிராஜ் உள்பட துணை கலெக்டர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story