செல்போன் குறுந்தகவல் மூலம் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேர் சிக்கினர்


செல்போன் குறுந்தகவல் மூலம் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 22 April 2020 11:15 PM GMT (Updated: 22 April 2020 10:33 PM GMT)

செல்போனில் குறுந்தகவல் அனுப்பியதன் மூலம் மோட்டார் சைக்கிள் திருடர்கள் பிடிபட்டுள்ளனர்.

ராமேசுவரம், 

கொரோனா தடுப்பு ஊரடங்கின் போது தேவையில்லாமல் சுற்றித்திரிபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடத்த போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பாம்பன் பகுதியில் தனிப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பாம்பன் ரெயில்வே கேட் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த ரஞ்சித்கான் (வயது 29), ஹமீது சுல்தான் (29) ஆகியோரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இந்தநிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதை தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு போலீஸ் நிலையத்தில் இருந்து செல்போனில் குறுந்தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி வாலிபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து செல்போனில் குறுந்தகவல் அனுப்பியதில் அது திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்த ஒருவருக்கு சென்றுள்ளது. 

அதைத்தொடர்ந்து அவர் பாம்பன் போலீஸ் நிலையத்துக்கு வந்து மோட்டார் சைக்கிளை பார்த்து, அது தன்னுடைய வாகனம் என்றும், கடந்த ஓராண்டுக்கு முன்பு திருடு போய்விட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து ரஞ்சித்கான், ஹமீது சுல்தான் ஆகியோரை போலீசார் பிடித்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் பல்வேறு இடங்களில் இதுவரை 8 மோட்டார் சைக்கிள்களை திருடியிருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்ராஜா தலைமையிலான போலீசார், வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கீழக்கரையை சேர்ந்த ரியாஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். செல்போனில் குறுந்தகவல் அனுப்பியதன் மூலம் மோட்டார் சைக்கிள் திருடர்கள் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story