சேலத்தில் டாக்டர்கள், போலீசார் உள்பட 120 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
சேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அறிகுறி காரணமாக டாக்டர்கள், போலீசார் உள்பட 120 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
சேலம்,
நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காய்ச்சல், சளி காரணமாக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த வாலிபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அந்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட 30 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
கோவை புதூர் பட்டாலியனை சேர்ந்த போலீசார் சேலம் அன்னதானப்பட்டி காவலர் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டு பல்வேறு பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த 27 வயதுடைய போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா வைரசுக்கான அறிகுறி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவருடன் தங்கியிருந்த இன்ஸ்பெக்டர் உள்பட 90 போலீசாரும் சேலம் குமாரசாமிப்பட்டி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டனர். மேலும் அவர்களுக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது.
இதற்கிடையில் கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ள போலீஸ்காரரின் மனைவிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப் பட்டுள்ளதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள இன்கு பேட்டரில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் ஆஸ்பத்திரிக்கு பணி கேட்டு அங்கு சென்றார். இதனால் அவருடன் பணியாற்றிய போலீசாரையும் தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர அந்த போலீஸ்காரர் பணியாற்றிய இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது அவருடன் நெருங்கி நின்று பேசியவர்கள் யார்? யார்? என்ற விவரங்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story