பித்தளை விளக்கு தொழிலாளர்களின் வருமானத்தை முடக்கிய கொரோனா


பித்தளை விளக்கு தொழிலாளர்களின் வருமானத்தை முடக்கிய கொரோனா
x
தினத்தந்தி 24 April 2020 4:38 AM IST (Updated: 24 April 2020 4:38 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா காரணமாக அமலில் உள்ள ஊரடங்கினால் பித்தளை பித்தளை பொருட்கள் தயாரிக்கும் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

காரைக்குடி, 

காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி கிராமத்தில் பித்தளை பொருட்கள் தயாரிக்கும் பட்டறைகள் நிறைய உள்ளன. இந்த பட்டறைகளில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த பட்டறையில் குத்து விளக்கு, அகல் விளக்கு, பாவை விளக்கு, நான்கு மற்றும் ஐந்து முக குத்து விளக்குகள், சாமி பூஜை பொருட்கள், தீபாராதனை கரண்டி, மஞ்சு விரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளின் கழுத்தில் கட்டப்படும் பித்தளை மணிகள், கிறிஸ்தவ ஆலய மணி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன.

இங்கு தயாரிக்கப்படும் பொருட்களுக்கு தனி மவுசு உள்ளது. மேலும் இங்கு தயாரிக்கப்படும் பித்தளை விளக்கின் உச்சி பகுதி கும்ப வடிவிலும், அதனுடைய முகம் நட்சத்திர வடிவிலும் இருப்பது தனி சிறப்பாகும். மேலும் இந்த விளக்கின் கைப்பிடியின் உள்பகுதி முழுக்க பித்தளையால் நிரப்பப்படுவதால், இங்குள்ள விளக்குகள் நல்ல கனத்துடன் இருக்கும்.

5 அங்குலம் முதல் 6 அடி வரை ஆர்டரின் பேரில் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இந்த ஊரில் தயாரிக்கப்படும் பித்தளை பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதற்கு தமிழக அரசின் சார்பில் சிறப்பு பரிசும் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு பெற்ற இந்த தொழிலை நம்பி பல நூறு குடும்பத்தினர் காலம், காலமாக பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

கொரோனா காரணமாக அமலில் உள்ள ஊரடங்கினால் இந்த தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தொழிலாளர்கள் தற்போது எவ்வித வருமானமும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பித்தளை விளக்கு தயாரிக்கும் பட்டறை நடத்தி வரும் மாரிக்கண்ணு கூறியதாவது:-

அரியக்குடி கிராமத்தில் பல குடும்பங்கள் பித்தளை விளக்குகளை தயாரிக்கும் தொழிலில் வாழையடி வாழையாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் விளக்குகளுக்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த விளக்கு தயாரிக்கும் பணியில் இதற்கு முன்பு ஆண்கள் மட்டும் ஈடுபட்டு வந்தனர். தற்போது பெண்களும் ஈடுபடுகின்றனர். பித்தளை விளக்கு செய்யும் பணி மட்டுமல்லாமல் செட்டிநாட்டு எவர்சில்வர் பாத்திரம் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

சீர் வரிசை பொருட்கள், பித்தளை பானைகள், பொங்கல் பானை, பித்தளை அண்டா, சருவம், மூடி, பொங்கல் சீர் வரிசை பொருட்கள் ஆகியவையும் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் நாள்தோறும் ரூ.500 முதல் ஆயிரம் வரை சம்பளமாக பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு காரணமாக இந்த தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் தொழிலாளர்கள் எவ்வித வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதில் சில தொழிலாளர்கள் பணம் தந்து உதவும்படி பரிதாபமாக கேட்கின்றனர். 

இது ஒருபுறம் இருக்க இங்கு ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பித்தளை விளக்குகள், சாமி பூஜை பொருட்கள் ஆகியவைகள் போக்குவரத்து வசதி இல்லாததால் வெளி மாவட்டத்திற்கு விற்பனைக்கு அனுப்ப முடியாமல் இங்கு தேக்க நிலையில் உள்ளன. இவ்வாறு தேக்க நிலையில் பொருட்கள் நீண்ட நாட்கள் இருந்தால் அதன் பள பளப்பு தன்மை குறைந்து, விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story