கொரோனா சமூக பரவலை தடுக்க மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் மூன்றாம் நிலையான சமூக பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர்,
மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கண்ணன் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் எடுத்த கொரோனா தடுப்பு நடவடிக்கையின் பலனாக நோய் தொற்று பாதிப்பு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. குமாரபுரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் கணவர் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்ப்பதால் அங்குள்ள ஒரு பிரிவில் 11 அலுவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனையில் யாருக்காவது நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் அவசியம் ஏற்படும். கலெக்டர் அலுவலகம் வந்து சென்ற பத்திரிகையாளர்கள் உள்பட தொடர்புடைய அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். தமிழக அரசு வரும் 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் தான் ஊரடங்கு உத்தரவினை கடுமையாக்கி உள்ளது. நமது மாவட்டத்தை பொறுத்த மட்டில் தற்போது உள்ள கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்படும். ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டம் முழுவதும் உள்ள 7 நகராட்சி, 9 பேரூராட்சி, 450 கிராம பஞ்சாயத்து பகுதிகளில் மூன்றாவது முறையாக ஒட்டு மொத்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும். கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். கருவி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளது. இதனை மருத்துவ நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். இதனை நோய் கண்டறியும் துல்லியதன்மை உறுதி செய்யப்பட்டால் அதன் பின்னர் நோய் தொற்று பாதிப்புக்கான மருத்துவ பரிசோதனை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியிலேயே செய்யப்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று மூன்றாம் நிலைக்கு வருவதை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் தடுப்பு நடவடிக்கையில் முழு பலன் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story