பன்னீர் திராட்சை விவசாயத்தில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா
கொரோனா காரணமாக இந்தாண்டு திராட்சை சாகுபடியில் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
காரைக்குடி,
தென்மாவட்டங்களில் ஆங்காங்கே திராட்சை சாகுபடி நடந்து வருகிறது. அதிலும் பன்னீர் திராட்சையை விவசாயிகள் பலர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள திராட்சையை ஊரடங்கினால், அறுவடை செய்யாமல் கொடியிலேயே விட்டுள்ளனர். இதனால் திராட்சை விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
காரைக்குடி அருகே பேயன்பட்டி பகுதியில் பொறியியல் பட்டதாரியான விடுதலை அரசு, தனது தோட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பன்னீர் திராட்சை சாகுபடி செய்து வருகிறார். கொரோனாவினால் அமலில் உள்ள ஊரடங்கு திராட்சை விவசாயத்தை எந்த அளவுக்கு பாதித்து உள்ளது என்பது குறித்து அவர் கூறியதாவது:-
எனது தோட்டத்தில் 3 ஏக்கர் நிலத்தில் தேனி மாவட்டத்தில் இருந்து கொண்டு வந்த திராட்சை செடி குச்சிகளை வைத்து பயிரிட்டுள்ளேன். ஆண்டுதோறும் இந்த செடிகளுக்கு வேலையாட்கள் மூலம் பராமரிப்பு செய்து அறுவடை காலங்களில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக வியாபாரிகள் இங்கு வந்து, பழங்களை வாங்கி செல்வது வழக்கம். ஒரு குறிப்பிட்ட அளவு மட்டும் உள்ளூர் பகுதி மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் தோட்டத்தின் அருகிலேயே விற்பனை நிலையம் அமைத்து நேரடியாக விற்பனை செய்து வந்தேன்.
நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக தற்போது அறுவடை செய்த பழங்களை வெளி மாவட்டத்திற்கு விற்பனைக்கு அனுப்ப முடியாமல் உள்ளூரில் உள்ள வியாபாரிகளுக்கு மட்டும் விற்பனை செய்துள்ளேன். கடந்த காலங்களில் 6 டன் வரை அறுவடை செய்யப்பட்டு வந்த இந்த திராட்சை பழங்கள், தற்போது அதிக அளவில் வெப்பம் உள்ளதால் குறைந்தளவு மட்டும் அறுவடை செய்ய முடிகிறது.
ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு விளைந்த திராட்சை பழங்களை குறைந்த விலைக்கு தான் விற்பனை செய்ய முடிந்தது. கொரோனா காரணமாக இந்தாண்டு திராட்சை சாகுபடியில் பெருமளவு நஷ்டத்தை சந்திக்க வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story