கர்நாடகத்தில் ரூ.10 கோடி தரமற்ற விதைகள் பறிமுதல் - கடும் நடவடிக்கை எடுக்க எடியூரப்பா உத்தரவு


கர்நாடகத்தில் ரூ.10 கோடி தரமற்ற விதைகள் பறிமுதல் - கடும் நடவடிக்கை எடுக்க எடியூரப்பா உத்தரவு
x
தினத்தந்தி 26 April 2020 12:23 AM GMT (Updated: 26 April 2020 12:23 AM GMT)

கர்நாடகத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள தரமற்ற விதைகளை விவசாயத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதையொட்டி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டு உள்ளார். முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெங்களூரு, 

“விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் உத்தரவின்பேரில் கடந்த 24-ந் தேதி அத்துறை அதிகாரிகள் ஹாவேரி மற்றும் தார்வார் மாவட்டங்களில் உள்ள சில விதைகள் குடோன்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் தரமற்ற மக்காசோள விதைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கர்நாடகத்தில் போலி விதைகளை விற்பனை செய்பவர்களை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். ஹாவேரி மாவட்டம் பேடகி நகரில் உள்ள ஒரு தனியார் குடோனில் இருந்து 7,026 குவிண்டால், பல்லாரி மாவட்டம் ஹடகலியில் 7,366 குவிண்டால் விதைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நடவடிக்கை எடுத்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.10 கோடி ஆகும்.

கடும் சட்ட நடவடிக்கை

கர்நாடகத்தில் முதல் முறையாக இவ்வளவு அதிகமான போலி விதைகளை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். இதற்காக விவசாயத்துறை மந்திரி மற்றும் அந்த துறையை சேர்ந்த அதிகாரிகளை பாராட்டுகிறேன். இந்த போலி விதைகளை விற்பனை செய்த நிறுவனங்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

கர்நாடகத்தில் 11 மாவட்டங்களில் அதிகளவில் மக்காசோளம் பயிரிடப்படுகிறது. தரமான விதைகளின் அடிப்படையில் தான் அவர்களுக்கு நல்ல விளைச்சல் கிடைக்கிறது. விவசாயிகள் தரமற்ற விதைகளை வாங்கக்கூடாது. நல்ல தரமான விதைகளை வாங்கி பயன்படுத்தி நல்ல மகசூல் பெற வேண்டும்.

போலி விதைகள்

தரமற்ற விதைகள் மற்றும் பூச்சி மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் இத்தகைய போலி விதைகள் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க இனி வரும் காலங்களிலும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Next Story