கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நாகர்கோவில் சிறையில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு


கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நாகர்கோவில் சிறையில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 26 April 2020 1:25 AM GMT (Updated: 26 April 2020 1:25 AM GMT)

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஜெயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஜெயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

சிறை கைதிகள்

குமரி மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருகிறது.

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் கைதிகள் இருந்து வருகிறார்கள். புதிய வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை இந்த சிறையில் அடைப்பதில்லை. அவர்கள் குழித்துறை சிறையில் அடைக் கப்படுகிறார்கள்.

திடீர் ஆய்வு

இந்தநிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மாவட்ட சிறை அமைந்திருப்பதால் சிறைக்குள் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாநகராட்சி நகர்நல அதிகாரி கின்சாலும் இருந்தார். அப்போது சிறைக்குள் கிருமி நாசினி மருந்துகள் எவ்வாறு தெளிக்கப்படுகிறது? கைதிகள் நெருக்கடி இல்லாமல் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்களா? அவர்களுடைய உடல்நலம் எந்த அளவில் உள்ளது? யாருக்காவது சளி, காய்ச்சல், இருமல் போன்ற தொற்றுகள் உள்ளதா? என்பது குறித்து சிறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

சூப்பர் மார்க்கெட்

அப்போது குறிப்பிட்ட நாள் இடைவெளியில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுவதாகவும், கைதிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், போதிய இடைவெளியுடன் அவர்கள் சிறையில் இருந்து வருவதாகவும், ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் இருந்து அவ்வப்போது டாக் டர்கள் வந்து கைதிகளுக்கு பரிசோதனை மேற்கொள்வதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் சிறையைவிட்டு வெளியே வந்த மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.

அப்போது அங்குள்ள ஊழியர்கள் முக கவசம் அணிந்துள்ளார்களா? சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா? என்பதையும் அவர் பார்வையிட்டார்.


Next Story