முழு ஊரடங்கு உத்தரவு அமல்: பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை கலெக்டர் தகவல்


முழு ஊரடங்கு உத்தரவு அமல்: பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 27 April 2020 4:30 AM IST (Updated: 27 April 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகரில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

கோவை,

கோவை கலெக்டர் ராஜாமணி சிங்காநல்லூரில் அமைந்து உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் அங்கு பணிபுரியும் 100 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

இதன்பின்னர் கலெக்டர் ராஜாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் உத்தரவுப்படி கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேறு எந்த நோய்க்கும் சிகிச்சை அளிக்கப்படவில்லை.

3 குழுக்கள்

இங்கு டாக்டர்கள், நர்சுகள் கொண்ட 3 மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுதவிர ஒரு குழு எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 560 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் 141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 118 பேர் முழுவதும் குணமடைந்து விட்டனர். மீதம் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு குணமடைந்த பலரும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளனர்.

கோவை மாநகர் மற்றும் ஊரக பகுதிகளில் மொத்தம் 18 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. கோவையில் தற்போது முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரும் நபர்கள் மீது காவல் துறை மூலம் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story