போலீஸ் ஏட்டுக்கு கொரோனா: பெருங்குடிக்கு வெளிநபர்கள் வர தடை; எல்லைகள் மூடல்
திருப்பரங்குன்றம் அருகே பெருங்குடியில் போலீஸ் ஏட்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அந்த பகுதியின் எல்லை மூடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட ஏட்டு குடும்பத்தினர் உள்பட 41 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பெருங்குடியை சேர்ந்த போக்குவரத்து போலீஸ் ஏட்டுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்த நிலையில் வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் சிவக்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கச்சாமி, ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் போலீஸ் ஏட்டுவின் குடும்பத்தினர் உள்ளிட்ட 41 பேருக்கு ரத்த மாதிரி, சளி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். மேலும் போலீஸ் ஏட்டுவிடம் நெருக்கம் உள்ளவர்கள் யார்? என்பதை கண்டறியும் பணி நடந்து வருகிறது.
இந்தநிலையில் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் ஆசிக், பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் பத்மாமுருகேசன் ஊராட்சி செயலர் அழகு ஆகியோர் மேற்பார்வையில் போர்க்கால நடவடிக்கையாக நேற்று தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதற்கிடையே பெருங்குடி தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டு போலீஸ் ஏட்டு குடியிருப்பு பகுதியை சுற்றியுள்ள பகுதி களில் தகரம் மூலம் தடுப்பு அமைத்து எல்லை மூடப்பட்டது. 12 பேர் கொண்ட தன்னார்வலர்களின் செல்போன் எண்கள் கொண்ட துண்டு பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் இருந்து யாரும் வெளியே செல்லக் கூடாது. ஆகவே அவர்கள் தன்னார்வலர்களின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநபர்கள் யாரேனும் உள்ளே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story