திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுக்கு 200 ஏக்கர் வாழை சேதம்; 2 ஆயிரம் பப்பாளி மரங்கள் முறிந்தன


திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுக்கு 200 ஏக்கர் வாழை சேதம்; 2 ஆயிரம் பப்பாளி மரங்கள் முறிந்தன
x
தினத்தந்தி 27 April 2020 6:57 AM IST (Updated: 27 April 2020 6:57 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வீசிய பலத்த சூறாவளி காற்றுக்கு சுமார் 200 ஏக்கர் வாழைகள், 2 ஆயிரம் பப்பாளி மரங்கள் முறிந்து நாசமாகின. 30 வீடுகளின் மேற்கூரை காற்றில் பறந்தது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான கோடைவெயில் கொளுத்தி வருகிறது. வீட்டுக்குள் இருந்தாலும் வெப்பத்தால் வியர்வை குளியல் போடும் நிலை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மதியத்துக்கு பின்னர் வானில் கருமேகங்கள் திரண்டு வெப்பத்தை குறைத்தது. ஆனால் மழை பெய்யாமல் விவசாயிகளை ஏமாற்றி வந்தது.

இதனால் கோடைகால சாகுபடிக்காக காத்திருக்கும் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் மழை பெய்யாததால் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கோடைமழை பெய்யாமல் பொய்த்து போனால், மாவட்டம் முழுவதும் விவசாயத்துக்கு மட்டுமின்றி குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.

பலத்த காற்று

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வெயில் அதிகமாக இருந்தது. மதிய வேளைக்கு பின்னர் வானில் மேகங்கள் திரண்டதால், வெயிலின் தாக்கம் குறைந்தது. இதையடுத்து இடி, மின்னலுடன் பலத்த காற்றும் வீசியது. இதனால் நல்ல மழை பெய்யும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்தனர்.

ஆனால் சுமார் 1 மணி நேரம் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் மழையின் வேகம் குறைந்தது. கொடைக் கானல், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமாரான அளவு மழை பெய்தது. இதற்கிடையே திண்டுக்கல் ஒன்றியம் அடியனூத்து அருகேயுள்ள கொல்ராம்பட்டியில் மின்னல் தாக்கியதில் லட்சுமி என்ற பெண் பலியானார். மேலும் 2 பெண்கள் காயம் அடைந்தனர்.

30 வீடுகள் மேற்கூரை சேதம்

அதேநேரம் பலத்த சூறாவளி காற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. திண்டுக்கல் சவேரியார்பாளையம், முனிசிபல் காலனி, நல்லமநாயக்கன்பட்டி மற்றும் சாணார்பட்டி அருகேயுள்ள தவசிமடை, விராலிபட்டி, வடகாட்டுப்பட்டி, நொச்சிஓடைப்பட்டி, கொசவபட்டி, கூவனூத்து புதூர், உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு வீடுகள், ஆஸ்பெஸ்டாஸ் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மாவட்டம் முழுவதும் 30 வீடுகளின் மேற்கூரை சேதமடைந்தது.

அதேபோல் தோட்டங்களில் மின்கம்பங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன. இதனால் ஒருசில கிராமங்களில் இரவு மின்தடை ஏற்பட்டது. கொடைரோடு அருகேயுள்ள ஒருத்தட்டு கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் தோட்டத்தில் அரசு மானியத்துடன் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்சார தகடுகள் சேதம் அடைந்தன.

வாழைகள் நாசம்

இதுஒருபுறம் இருக்கையில் பலத்த காற்றுக்கு விவசாய பயிர்கள் நாசமாகின. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை வத்தலக்குண்டு, கோட்டூர் ஆவாரம்பட்டி, சாணார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, கூவனூத்து புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் வாழைகள் பயிரிடப்பட்டு இருந்தன. இதில் செவ்வாழை, கற்பூரவல்லி வாழைகள் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளன.

இதில் பெரும்பாலான வாழைகள் குலைதள்ளி பாதி விளைச்சல் அடைந்து இருந்தன. இன்னும் ஒருசில வாரங்களில் அறுவடைக்கு தயாராகி விடும் நிலையில் இருந்தன. இந்த வாழைகளில் பெரும்பாலானவை பலத்த காற்றுக்கு சின்னாபின்னாமாகின. இதில் கூவனூத்து புதூரில் தமிழ்மணி என்பவர் 1 ஏக்கரில் பயிரிட்டுள்ள வாழைகள் சாய்ந்தன. மேலும் நல்லமநாயக்கன்பட்டியில் ஆரோக்கியம் என்பவரின் 600 வாழைகள் முறிந்து விழுந்தன.

நிலக்கோட்டை

சிறுமலை, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் சேதம் அடைந்து விட்டன. அவ்வாறு பராமரிக்கப்பட்டு அறுவடை செய்வதற்கு ஒருசில வாரங்களே இருந்த நிலையில், வாழைகள் முறிந்து விழுந்தன. இதில் பல விவசாயிகள் ஏற்கனவே கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கஜா புயலிலும் இதேபோல் வாழைகள் சேதம் அடைந்தன. அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்து விவசாயிகள் பலர் வாழை பயிரிட்டனர்.

சூறவாளி காற்றுக்கு தென்னை மரங்கள், கொய்யா, மா மரங்களும் முறிந்து விழுந்தன. மேலும் நிலக்கோட்டை அருகேயுள்ள மைக்கேல்பாளையத்தை சேர்ந்த அமுல்ராஜ் (வயது 36) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த 2 ஆயிரம் பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்து நாசமாகின. இதுதவிர நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பயிரிடப்பட்ட முருங்கை மரங்களும் முறிந்து விழுந்தன.

நிவாரணம்

தற்போது மகசூல் கிடைக் கும் நேரத்தில் மீண்டும் சூறாவளி காற்று அவர்களின் வாழ்வில் விளையாடிவிட்டது. ஏற்கனவே ஊரடங்கால் விளைபொருட்களுக்கு விலையில்லாத நிலை உள்ளது. இந்த நிலையில் சூறாவளி காற்று வாழை, பப்பாளி, முருங்கை ஆகிய மரங்களை சேதப்படுத்தி, பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர்.

எனவே மாவட்டம் முழுவதும் காற்றில் சேதமடைந்த வாழைகளை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இதற்கிடையே நேற்றும் காலையில் வெயில் கொளுத்தியது. பின்னர் மதியத்துக்கு பின்னர் வானில் மேகங்கள் திரண்டன. ஆனால், ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழை பெய்து ஏமாற்றியது.


Next Story