வேலூர், காட்பாடி பகுதிகளில் பலத்த மழை உழவர்சந்தையில் காய்கறிகள் தண்ணீரில் மிதந்தன


வேலூர், காட்பாடி பகுதிகளில் பலத்த மழை உழவர்சந்தையில் காய்கறிகள் தண்ணீரில் மிதந்தன
x
தினத்தந்தி 27 April 2020 9:47 AM IST (Updated: 27 April 2020 9:47 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. காட்பாடியில் தற்காலிக உழவர் சந்தையில் தண்ணீரில் காய்கறிகள் மிதந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

காட்பாடி,

வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் அளவு பதிவாகிறது. கடந்த 23-ந் தேதி 102.7 டிகிரியும், 24-ந் தேதி 103.1 டிகிரியும், நேற்று முன்தினம் அதிகபட்சமாக 104.4 டிகிரியும் பதிவானது. இரவு நேரத்தில் அனல் காற்று வீசுவதால் பலர் தூக்கமின்றி தவித்து வந்தனர். கோடை மழை பெய்து வெப்பத்தை தணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். நேற்று முன்தினம் மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறிதுநேரம் மட்டுமே மழை பெய்தது. அதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சுமார் 7.30 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் விடாமல் மழை கொட்டி தீர்த்தது. அதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. வேலூர் மட்டுமல்லாது சுற்றுப்புற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

தண்ணீரில் மிதந்த காய்கறிகள்

காட்பாடி காந்திநகர் தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தற்காலிக உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. பலத்த மழை காரணமாக விளையாட்டு மைதானம் முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கியது. அதனால் தரையில் வைத்திருந்த காய்கறிகள் தண்ணீரில் மிதந்தன. செய்வதறியாது தவித்த விவசாயிகள் உடனே அவற்றை எடுத்து ஓரமாக வைத்தனர்.

மழை தொடர்ந்து பெய்தால் பொதுமக்கள் யாரும் காய்கறிகள் வாங்க வரவில்லை. மழையில் நனைந்த காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர். வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story