அரக்கோணம் அருகே மின்னல் தாக்கி பிளஸ்-1 மாணவி பலி


அரக்கோணம் அருகே மின்னல் தாக்கி பிளஸ்-1 மாணவி பலி
x
தினத்தந்தி 27 April 2020 10:18 AM IST (Updated: 27 April 2020 10:18 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே மின்னல் தாக்கி பிளஸ்-1 மாணவி பரிதாபமாக இறந்தார்.

அரக்கோணம்,

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று காலை பலத்த மழை பெய்தது.

அரக்கோணம் அருகே வளர்புரம் காலனியை சேர்ந்தவர் ஏகாமபரம். இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மகள் மகாலட்சுமி (வயது 16) அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று காலை மகாலட்சுமி வீட்டின் பின்புறம் சென்றுள்ளார்.

மின்னல் தாக்கியது

அப்போது மின்னல் தாக்கியதில் மகாலட்சுமி மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த உறவினர்கள் மகாலட்சுமியை உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அரக்கோணம் உதவி கலெக்டர் பேபி இந்திரா, தாசில்தார் ஜெயக்குமார், சு.ரவி எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மின்னல் தாக்கி இறந்த மாணவியின் தாயாருக்கு ஆறுதல் கூறினர். அப்போது சு.ரவி எம்.எல்.ஏ. ரூ.10 ஆயிரத்தை சொந்த நிதியிலிருந்து நிவாரணமாக மகாலட்சுமியின் குடும்பத்திற்கு வழங்கினார். மேலும் அரசு நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story