கொரோனா பாதித்த பகுதியில் 634 வீடுகள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு - கலெக்டர் தகவல்
கொரோனா பாதித்தவர்கள் வசிக்கும் பகுதியில் 634 வீடுகள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் உத்தரவின்படி கொரோனா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை 1,432 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் 15 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
1,191 பேருக்கு தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன. மீதம் உள்ள பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. நோய் தொற்று உள்ள பகுதிகள் முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் நோய் பரவலை தடுக்க கிருமிநாசினி தெளிப்பு, விழிப்புணர்வு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த 4 ஆயிரத்து 777 பேர் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டனர்.
மாவட்டத்தில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட 15 பேர் வசிக்கும் பகுதிகளில் 634 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அதில் வழங்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்ணில் இதுவரை 469 அழைப்புகள் பல்வேறு கோரிக்கை தொடர்பாக ஏற்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், பொதுமக்கள் 144 தடை உத்தரவை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவினை மீறியதாக 2 ஆயிரத்து 637 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை கடைபிடிக்காத 203 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முக கவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளி, தனித்திருத்தல் போன்றவைகளை கடைபிடித்தால் நோய் பாதிப்பில் இருந்து தாங்களும், தங்களை சுற்றி உள்ளவர்களும் தப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story