கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்க ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் பிரதமரிடம், நாராயணசாமி வலியுறுத்தல்


கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்க ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் பிரதமரிடம், நாராயணசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 April 2020 2:43 AM GMT (Updated: 28 April 2020 2:43 AM GMT)

கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்க ரூ.1,000 கோடி வழங்க வேண்டும். மே 3-ந் தேதிக்கு பிறகு எடுக்கும் முடிவுகள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் இருக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம், முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி,

பிரதமர் நரேந்திர மோடி 4-வது முறையாக நேற்று அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். முன்னதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, கேபினட் அரங்கத்தில் இருந்தபடி பிரதமர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், அரசு செயலாளர்கள் பிரசாந்த் குமார் பாண்டா, விக்ரமராஜா, கலெக்டர் அருண் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதுவரை நடைபெற்ற காணொலி காட்சி ஆலோசனை கூட்டங்களில் பேசாத முதல்-மந்திரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசினார்கள். நேரமின்மை காரணமாக மற்ற மாநில முதல்-மந்திரிகள் தங்களது கருத்துகளை பிரதமருக்கு பேக்ஸ் மூலமாக அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

நிவாரண உதவி

பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி மாநில முதல்-அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது எனக்கும் பேச வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் புதுவை மாநிலத்தில் 3 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெறுவதை எடுத்துக் கூறினேன். கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்காக மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து கூறினேன். மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தேன். மேலும் மருத்துவ உபகரணங்கள், முக கவசம், பாதுகாப்பு கவச உடை போன்றவற்றை தரவும், முதல் கட்டமாக நிவாரண பணிகளுக்கு ரூ.200 கோடியும் முழுமையாக ரூ.995 கோடி தர கடிதம் எழுதி இருந்தேன் என்றும் தெரிவித்தேன்.

புதுவை மாநிலத்திற்கு கலால் மற்றும் வணிக வரி மூலம் தான் வருமானம். தற்போது ஊரடங்கினால் அந்த வருமானம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும். நிவாரண பணிகளுக்கு மாநில அரசின் நிதியில் இருந்து தான் தற்போது பணம் வழங்கி உள்ளோம். எனவே மத்திய அரசு உடனடியாக உதவி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். குறிப்பாக சரக்கு மற்றும் சேவை வரிக்கான நிதி ரூ.320 கோடியும், 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவதற்காக ரூ.2,200 கோடியும், மாநிலங்களுக்கு நிதி குழுவில் இருந்து வழங்கப்பட வேண்டிய தொகை 41 சதவீதம், டெல்லியில் உள்ள ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்குவதற்கான தொகையை கொடுப்பது போல் புதுச்சேரிக்கும் மத்திய அரசு தர வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.

6 மாத காலம் வட்டி

மே 3-ந் தேதிக்கு பிறகு மத்திய அரசு எந்த முடிவெடுத்தாலும் அது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் இருக்க வேண்டும். அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினேன். தற்போது தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை இயங்கினாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மின் தொகுப்பில் 85 சதவீதத்தை செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. தற்போது உள்ள நிலையில் அவர்களால் இதை கட்ட முடியாது. இது தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். மாநிலங்கள் மின்சார தொகுப்புக்கு செலுத்த வேண்டிய நிதியை கொடுக்க ஆறு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும். மத்திய அரசிடம் வாங்கிய கடனுக்கான 6 மாத கால வட்டியை கேட்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினேன்.

தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு

புதுவையைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் இந்தியா வர முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறினேன். பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது பொருளாதாரம் பாதிக்கப்பட்ட சமயத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு தேவையான நிதி வழங்கப்பட்டது. தனியார் தொழிற்சாலைகள் தற்போது தங்களது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளன. அவர்களுக்கு 3 மாத சம்பளம் தர தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.

மே 3-ந் தேதிக்குப் பிறகு ஊரடங்கு இருந்தால் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள கைவினை கலைஞர்களுக்கு நிவாரணம் கிடைக்கவும் வலியுறுத்தினேன்.

பிரதமர் பதில்

அதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி பேசும்போது, தற்போது வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிவப்பு பகுதியாக இருப்பவை ஆரஞ்சு பகுதியாகவும், ஆரஞ்சு பகுதி பச்சை பகுதியாகவும் மாற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த விஷயத்தில் மத்திய அரசு அரசியல் எதுவும் செய்யாது என்றும் கூறினார். புதுவை மாநிலத்தில் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் கூறியுள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.


Next Story