புதுவைக்குள் வர அனுமதி மறுப்பு: மதுபான லாரி டிரைவர்கள் திடீர் போராட்டம்


புதுவைக்குள் வர அனுமதி மறுப்பு: மதுபான லாரி டிரைவர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 29 April 2020 9:12 AM IST (Updated: 29 April 2020 9:12 AM IST)
t-max-icont-min-icon

புதுவைக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டதால், மதுபான லாரி டிரைவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

கோவா மாநிலத்தில் இருந்து கடந்த மாதம் 20-ந் தேதி 11 லாரிகளில் ரூ.1 கோடி மதிப்புள்ள மதுபானங்களை ஏற்றிக்கொண்டு டிரைவர்கள், கிளனர்கள் என 16 பேர் புதுச்சேரிக்கு புறப்பட்டனர். அவர்கள் கடந்த மாதம் 22-ந் தேதி ஓசூரை அடைந்த நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் லாரிகள் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் அவர்கள் வைத்திருந்த பர்மிட்டும் முடிந்துவிட்டது.

இதைத்தொடர்ந்து பெரும் முயற்சிக்கு பின் தமிழக அதிகாரிகளிடம் அனுமதி பெற்று புதுவை எல்லையான கோரிமேட்டிற்கு வந்தனர். ஆனால் ஊரடங்கை காரணம் காட்டி மதுபான லாரிகளை புதுச்சேரிக்குள் நுழைய அதிகாரிகள் அனுமதியளிக்க மறுத்தனர். புதுவைக்குள் மதுபானங்களை கொண்டுவர அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பல முறை முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சி பலன் தரவில்லை.

மதுபானங்கள் கிடைக்காத இந்த காலகட்டத்தில் 11 லாரிகளில் மதுபானங்கள் இருந்ததால் யாரேனும் தங்களை தாக்கி அவற்றை கொள்ளை அடிக்கலாம் என்ற பயம் அவர்கள் மத்தியில் இருந்தது. இதற்கிடையே எல்லை பகுதியில் ஆய்வுக்கு வந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் லாரிகளை உடனடியாக புதுச்சேரிக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார்.

போராட்டம்

கடந்த 10 நாட்களாக புதுவை அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டும், எந்தவித பலனும் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த லாரி டிரைவர்கள் நேற்று மாலை கோரிமேடு எல்லைப் பகுதிக்குள் நுழைந்து ரோட்டில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அப்போது எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து லாரி டிரைவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி தமிழக பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.


Next Story