இலங்கையில் புற்றுநோயால் மரணம் அடைந்த தந்தையின் முகத்தை வீடியோகால் மூலம் காண முருகனுக்கு அனுமதி மறுப்பு


இலங்கையில் புற்றுநோயால் மரணம் அடைந்த தந்தையின் முகத்தை வீடியோகால் மூலம் காண முருகனுக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 29 April 2020 10:58 AM IST (Updated: 29 April 2020 10:58 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் புற்றுநோயால் மரணம் அடைந்த தந்தையின் முகத்தை வீடியோகால் மூலம் முருகன் கடைசியாக காண சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர் என்று வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 28 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் இருவரும் விடுதலை செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையே முருகனின் தந்தை வெற்றிவேல் (வயது 75) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய உடல்நிலை கடந்த 26-ந் தேதி திடீரென மோசமானது. இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெற்றிவேல் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் உடல் நேற்று காலை 10 மணிக்கு அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து முருகன், நனிளி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அனுமதி மறுப்பு

அதைத்தொடர்ந்து முருகன், நளினி ஆகியோர் உயிரிழந்த வெற்றிவேலின் முகத்தை கடைசியாக ஒருமுறை வீடியோகால் மூலம் காண அனுமதிக்க வேண்டும் என சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவுவரை நளினி, முருகனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று காலை முருகனின் தந்தை உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து அவர்களது வக்கீல் புகழேந்தி கூறுகையில், தந்தையின் முகத்தை வீடியோகால் மூலம் கடைசியாக பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று முருகன் சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அளித்திருந்தார். அதேபோன்று நளினியும் மாமனாரின் முகத்தை பார்க்க ஏற்பாடு செய்யும்படி கடிதம் கொடுத்தார். கடைசியாக ஒருமுறை முகத்தை பார்க்க அனுமதி கிடைக்கும் என்று இருவரும் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் சிறைஅதிகாரிகள் வாய்மொழியாக அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் நேற்று காலை 10 மணிவரை காத்திருந்த முருகனின் உறவினர்கள் ஏமாற்றத்துடன் வெற்றிவேலின் உடலை அடக்கம் செய்துள்ளனர். தந்தையின் முகத்தை கடைசியாக ஒருமுறை முருகன் பார்க்க சிறைத்துறை அனுமதி அளித்திருக்கலாம் என்று தெரிவித்தார்.


Next Story