மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: திருப்பூரில் வீடு இடிந்து பொருட்கள் சேதம்
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதில் திருப்பூரில் வீடு இடிந்து பொருட்கள் சேதமானது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. திருப்பூர் மாநகரில் இரவு 7.30 மணி முதல் மழை பெய்தது. நள்ளிரவு 1.30 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்தது. பல இடங்களில் மின் தடைபட்டது.
இந்த மழை காரணமாக நேற்று காலை காந்திநகரை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வீட்டில் இருந்த டி.வி., பீரோ உள்ளிட்ட பொருட்கள் சேதமானது. சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு தாசில்தார் பாபு சென்று விசாரணை நடத்தினார்.
இதுபோல் மாநகரின் பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. திருப்பூர் எல்.ஆர்.ஜி. மகளிர் கல்லூரி வளாகத்தில் மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது. செட்டிப்பாளையம் வெங்கடேஷ்வரா நகர் பகுதியில் மழைநீர் தேங்கி வீடுகளை சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். பின்னர் நேரம் செல்ல செல்ல மழைநீர் வடிந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி வரை பதிவான மழையளவு விவரம் வருமாறு-
திருப்பூர் வடக்கு தாலுகாவில் 60 மில்லி மீட்டரும், அவினாசியில் 14 மில்லிமீட்டரும், பல்லடத்தில் 21 மில்லி மீட்டரும், ஊத்துக்குளியில் 3 மில்லி மீட்டரும், காங்கேயத்தில் 64 மில்லி மீட்டரும், தாராபுரத்தில் 4 மில்லி மீட்டரும், மூலனுரில் 10 மில்லி மீட்டரும், குண்டடத்தில் 15 மில்லி மீட்டரும், திருமுர்த்தி அணைப்பகுதியில் 2 மில்லி மீட்டரும், அமராவதி அணைப்பகுதியில் 23 மில்லி மீட்டரும், உடுமலையில் 7.60 மில்லி மீட்டரும், மடத்துக்குளத்தில் 23 மில்லி மீட்டரும், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 87 மில்லி மீட்டரும்,வெள்ளகோவிலில் 13.20 மில்லி மீட்டரும், திருப்பூர் தெற்கு தாலுகாவில் 16 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
திருப்பூர் மாநகரில் நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
Related Tags :
Next Story