கோவை மாவட்டத்தில் 6 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்


கோவை மாவட்டத்தில் 6 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
x
தினத்தந்தி 30 April 2020 4:30 AM IST (Updated: 30 April 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. நேற்று 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

கோவை,

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து தெருக்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 141 ஆக இருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களை டாக்டர்கள் வழியனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், நேற்று கொரோனா சந்தேகத்துடன் 34 பேர் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப் பட்டனர். இதில் 29 பேர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும், 5 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 10 பேர் ஆண்கள், 24 பேர் பெண்கள் ஆவர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் அவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவில்தான் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்பது தெரியவரும். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

6 நாட்களாக பாதிப்பு இல்லை

கோவை மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. கடைசியாக கடந்த 23-ந் தேதி நடந்த பரிசோதனை முடிவில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அதன்பிறகு கடந்த 6 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இதனால் கோவை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 141 ஆகவே இருந்து வருகிறது.

நேற்று வீடு திரும்பிய 10 பேரையும் சேர்த்து இதுவரை மொத்தம் 128 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது. எனவே விரைவில் அவர்கள் வீடு திரும்புவார்கள்.

மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக கோவையில் கடந்த 6 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் காரணம் ஆகும். எனவே இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் யாரும் காரணமின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story