கொரோனா பாதிப்பில் இருந்து 95 வயது மூதாட்டி உள்பட 5 பேர் குணமடைந்தனர் இதுவரை 72 பேர் வீடு திரும்பினர்


கொரோனா பாதிப்பில் இருந்து 95 வயது மூதாட்டி உள்பட 5 பேர் குணமடைந்தனர் இதுவரை 72 பேர் வீடு திரும்பினர்
x
தினத்தந்தி 30 April 2020 8:58 AM IST (Updated: 30 April 2020 8:58 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் 95 வயது மூதாட்டி உள்பட மேலும் 5 பேர் நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். இதன்மூலம் இதுவரை 72 பேர் வீடு திரும்பி உள்ளனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 23-ந்தேதி வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 80 பேர் கண்டறியப்பட்டனர். இதில் திண்டுக்கல், பழனி, நத்தம், வேடசந்தூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் 76 பேர் ஆவர். அதேபோல் ராஜஸ்தான் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த 4 பேருக்கு தொற்று ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் கரூர் மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் கரூரில் சிகிச்சை பெற்றவர்களில், திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த முதியவர் மட்டும் இறந்து விட்டார். அதேநேரம் மீதமுள்ள நபர்கள் சிகிச்சையில் குணமடைந்து வீட்டுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

72 பேர் குணமடைந்தனர்

அந்த வகையில் நேற்று முன்தினம் வரை 67 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருந்தனர். இந்த நிலையில் நேற்று 3 பெண்கள் உள்பட திண்டுக்கல்லை சேர்ந்த மேலும் 5 பேர் குணமடைந்தனர். அதில் ஒருவர் 95 வயது மூதாட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர்கள் வீடு திரும்பினர். இதன்மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது.

மீதமுள்ள 7 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களும் குணமடைந்து ஒருசில நாட்களில் வீட்டுக்கு திரும்புவார்கள் என்று மருத்துவத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் கடந்த 6 நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் 80-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதில் இதுவரை யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story