கருங்கல்லை தூக்கி தலையில் போட்டு பெண் கொலை விரக்தியில் கணவனும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு


கருங்கல்லை தூக்கி தலையில் போட்டு பெண் கொலை விரக்தியில் கணவனும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 April 2020 5:52 AM GMT (Updated: 30 April 2020 5:52 AM GMT)

சொந்த ஊருக்கு வர, மனைவி மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கட்டிட தொழிலாளி, ஜோலார்பேட்டை அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் கருங்கல்லை தூக்கி போட்டு கொலை செய்தார். விரக்தியில் அதே கருங்கல்லை தனது தலையிலும், உடலிலும் தாக்கி கொண்டு தொழிலாளி தற்கொலைக்கு முயன்றார்.

ஜோலார்பேட்டை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இரணிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 40), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி விமலா (31). இவர்களுக்கு மதுஸ்ரீ (3) என்ற மகள் உண்டு. சங்கர், தனது குடும்பப் பிரச்சினையால் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு இரணிமேடுவில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த குடியானகுப்பம் கிராமத்துக்கு வந்து, அங்குள்ள ராமகவுண்டர் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி குடும்பத்துடன் வசித்து வந்தார்.

ஊரடங்கால் வேலை வாய்ப்பின்றி வீட்டில் இருந்த சங்கர் நேற்று முன்தினம் இரவு மனைவி விமலாவை சொந்த ஊரான இரணிமேடு கிராமத்துக்குப் போகலாம் வா, எனக்கூறி அழைத்துள்ளார். ஆனால் விமலா அந்த ஊருக்கு வர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த சங்கர், தன்னுடைய வீட்டருகே கிடந்த ஒரு கருங்கல்லை தூக்கி வந்து, வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த விமலாவின் தலையில் திடீரெனப் போட்டு நசுக்கி கொலை செய்தார். தலை சிதைந்து அதில் இருந்து ரத்தம் பீறிட்டு எழுந்தது, ரத்த வெள்ளத்தில் விமலா படுத்தப்படுக்கையிலேயே கால்களும், கைகளும் துடி துடித்தபடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தற்கொலை முயற்சி

மனைவி தன்னுடைய கண் எதிரே உயிரிழந்ததைப் பார்த்த சங்கர் வாழ்க்கையில் மேலும் வெறுப்படைந்து, மனைவியை கொலை செய்த அதே கருங்கல்லை எடுத்து வெறி பிடித்தவாறு தன்னுடைய உடலிலும், தலையிலும் தாக்கி கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அதில் அவருக்கு தலையில் அடிபட்டு மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து விமலாவை பார்த்துக் கதறினர். உடனே கிராம மக்கள் செல்போன் மூலமாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சங்கரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு, ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விமலாவின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story