ஈரோடு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் விடுவிக்கப்படுவது எப்போது? - கலெக்டர் சி.கதிரவன் அறிவிப்பு


ஈரோடு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் விடுவிக்கப்படுவது எப்போது? - கலெக்டர் சி.கதிரவன் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 May 2020 5:00 AM IST (Updated: 1 May 2020 2:24 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் விடுவிக்கப்படுவது எப்போது என்பது குறித்து கலெக்டர் சி.கதிரவன் அறிவித்து உள்ளார்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் குணம் அடைந்து உள்ளது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட உடன், கொரோனா தொடர்பு உடையவர்களின் பகுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 18 பகுதிகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு, சுமார் 32 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் தீவிர தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் கொரோனா தொற்றில் இருந்து ஈரோடு மாவட்டம் விடுதலை பெற்று இருப்பதாலும், கடந்த 14 நாட்களுக்கும் மேலாக புதிய தொற்று கண்டறியப்படாததாலும் படிப்படியாக தீவிர தனிமைப்படுத்துதலுக்கு உள்படுத்தப்பட்ட பகுதிகளை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து தேதி வாரியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் விடுவிக்கப்படும் விவரத்தை கலெக்டர் சி.கதிரவன் அறிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம் கொரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக விளங்கி வருகிறது. கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டன. இந்த பகுதிகள் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்ற அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வந்தன.

இங்கு தீவிர கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள் அமலில் இருந்தது. அந்தந்த பகுதிகளில் கடைசியாக நோய்த்தொற்று கண்டறியப்பட்டு 28 நாட்கள் நிறைவடைந்த பகுதிகளில் விடுவிக்கப்பட்டு வருகின்றன.இந்த பகுதிகளில் தனிமைப்படுத்துதல் விதி தளர்வு செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் சுல்தான் பேட்டை, கொல்லம்பாளையம் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, ரெயில்வே காலனி, மரப்பாலம் பகுதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளன. கவுந்தப்பாடியிலும் தனிமைப்படுத்தும் விதியில் தளர்வு செய்யப்பட்டு உள்ளது. கோபி நகராட்சி மற்றும் லக்கம்பட்டி பேரூராட்சி பகுதிகளும் விடுவிக்கப்பட்டு உள்ளன. சத்தியமங்கலம் நகராட்சி தனிமைப்படுத்துதலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது. கொடுமுடி அருகே உள்ள சென்னசமுத்திரம் பகுதியும் தளர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

அதைத்தொடர்ந்து வருகிற 5-ந்தேதி ஈரோடு மாநகராட்சியில் மீராமொய்தீன் வீதி (வளையக்கார வீதி), மோசிக்கீரனார் வீதி, சாஸ்திரிநகர், கருங்கல்பாளையம், கள்ளுக் கடை மேடு பகுதிகள் தனிமைப்படுத்துதலில் இருந்து விடுவிக்கப்பட உள்ளன. பி.பி.அக்ரஹாரம் பகுதி வருகிற 6-ந்தேதி விடுவிக்கப்படுகிறது. நம்பியூர் அழகாபுரி பகுதி 10-ந்தேதியும், கே.என்.பாளையம் பேரூராட்சி மற்றும் பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையம் ஆகிய பகுதிகள் 13-ந்தேதியும் விடுவிக்கப்படுகின்றன.

தனிமைப்படுத்துதலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு மே 3-ந் தேதி வரையான பொது ஊரடங்கு பொருந்தும். அவர்கள் அந்த விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும். மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட காலம்வரை தனிமைப்படுத்துதலில் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து, ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் ஏற்படாமல் பாதுகாக்க உதவ வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் சி.கதிரவன் கூறி உள்ளார்.

Next Story