நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூர் பிச்சம்பாளையம் அருகே நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனுப்பர்பாளையம்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி 28-வது வார்டுக்குட்பட்ட சின்ன பொம்மநாயக்கன்பாளையம், பாரதிநகர், ஸ்ரீநகர் மற்றும் 30-வது வார்டுக்குட்பட்ட குமாரசாமிநகர், கேத்தம்பாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு ஏற்கனவே முதற்கட்டமாக நிவாரண பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இந்த நிலையில் நேற்று 2-ம் கட்டமாக நிவாரண பொருட்கள் வாங்குவதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை முதல் பிச்சம்பாளையம் பள்ளி முன்பு காத்திருந்தனர்.
ஆனால் அவர்களுடைய பெயர் பயனாளிகள் பட்டியலில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் பிச்சம்பாளையம் கேத்தம்பாளையம் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் முறையாக கணக்கெடுத்து 2 நாட்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பெருமாநல்லூர் அருகே உள்ள காளிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட படையப்பா நகர், குருவாயூரப்பன் நகர் பகுதிகளில் தண்ணீர், சாலை, சாக்கடை வசதிகளை நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை எனவும், பொது இடங்களில் குடிநீர் இணைப்பு தர தாமதம் செய்வதாகவும் ஊராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான கிருமிநாசினி தெளித்தல், கபசுர குடிநீர் கொடுத்தல், நிவாரண பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கூட ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என கூறி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படையப்பா நகர் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்து தருவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
திருப்பூர் குப்பாண்டம் பாளையம் தொடக்கப்பள்ளி அருகே ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் அரிசியை கரைப்புதூர் எம்.எல்.ஏ. வழங்கினார். ஆனால் நிவாரண பொருட்கள் குப்பாண்டம்பாளையம் மேற்குப் பகுதியில் வசிக்கும் ஒரு தரப்பினருக்கும் வழங்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் அரிசி வழங்கிய நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள் சிலரை, நிர்வாகிகள் தாக்கியதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டினார். மேலும் டோக்கன் வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும், தெரிந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் கொடுத்து நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், குற்றம் சாட்டி நிவாரணம் கிடைக்காத பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றனர். இது பற்றிய தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் அனைவருக்கும் நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதனால் சாலை மறியலுக்கு முயன்ற அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story