பொள்ளாச்சி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகள்


பொள்ளாச்சி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகள்
x
தினத்தந்தி 30 April 2020 10:45 PM GMT (Updated: 2020-05-01T04:15:46+05:30)

பொள்ளாச்சி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி,

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் சத்து மாத்திரைகள், நிலவேம்பு, கபசுர மூலிகை பொடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி கமிஷனர் காந்திராஜ் தலைமை தாங்கி, சத்து மாத்திரைகள், மூலிகை பொடிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் மிகவும் கவனமுடன் பாதுகாப்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்கள் பயன்படுத்தி கொடுக்கும் முகக்கவசங்களை பாதுகாப்பாக வாங்கி அப்புறப்படுத்த வேண்டும். கையுறை, முகக்கவசம் இல்லாமல் சுகாதார பணிகளை மேற்கொள்ள கூடாது. கடைகளுக்கு செல்லும் போது கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். சத்து மாத்திரைகளை சரியாக நேரத்துக்கு சாப்பிட வேண்டும். இதேபோன்று நிலவேம்பு, கபசுர மூலிகை பொடிகளை காய்ச்சி குடித்து, நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

347 பேருக்கு...

நகராட்சியில் பணிபுரியும் 347 பேருக்கு சத்து மாத்திரைகள், நிலவேம்பு, கபசுர மூலிகை பொடிகள் வழங்கப்பட்டன. 10 நாட்களுக்கு தேவையான மாத்திரை, மூலிகை பொடிகள் வழங்கப்பட்டு உள்ளது. அதன்பிறகும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் நகர்நல அலுவலர் மாணிக்கவேல்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், சீனிவாசன், விஜய் ஆனந்த், செந்தில்குமார், ஜெயபாரதி மற்றும் மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story