கொரோனா சந்தேகம்: குழந்தைகள் உள்பட 41 பேர் கோவை ஆஸ்பத்திரிகளில் அனுமதி


கொரோனா சந்தேகம்: குழந்தைகள் உள்பட 41 பேர் கோவை ஆஸ்பத்திரிகளில் அனுமதி
x
தினத்தந்தி 1 May 2020 4:26 AM IST (Updated: 1 May 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா சந்தேகம் காரணமாக குழந்தைகள் உள்பட 41 பேர் கோவை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கோவை,

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தமிழக அளவில் கோவை 2-வது இடத்தில் உள்ளது. தற்போது இந்த வைரசால் பாதிக்கப்பட்ட 141 பேரில் பலர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதம் உள்ளவர்கள் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் நேற்று கொரோனா சந்தேகத்துடன் 41 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 20 பேர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும், 21 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த 41 பேரில் 18 குழந்தைகள் அடங்கும்.

18 குழந்தைகள்

17 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தை என்று 18 குழந்தைகள் கொரோனா சந்தேகத்துடன் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பொதுவாக குழந்தைகள் வெளியே செல்ல மாட்டார்கள். பெற்றோரும் அவர்களை வெளியே செல்ல அனுமதிப்பது இல்லை.

இருந்தபோதிலும் குழந்தைகள் கொரோனா சந்தேகத்துடன் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவர்களின் உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அத்துடன் அவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பெற்றோருக்கு பரிசோதனை

குழந்தைகள் வெளியே செல்வது இல்லை. ஆனால் வீட்டில் இருக்கும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வெளியே சென்று விட்டு வீடு திரும்புவார்கள். அவர்களிடம் இருந்து எளிதாக பரவும். எனவே தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ள 18 குழந்தைகளுக்கும் கொரோனா தாக்கி இருக்கலாம் என்ற சந்தேகம்தான் இருக்கிறது. பரிசோதனை முடிவு வந்த பின்னர்தான் தெரியும்.

எனவே அந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு காய்ச்சல், சளி இருக்கிறதா? என்று பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story