தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கக்கோரி பெண்கள் போராட்டம்


தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கக்கோரி பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 May 2020 4:50 AM IST (Updated: 1 May 2020 4:50 AM IST)
t-max-icont-min-icon

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தலில் 3 பேருக்கு. கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. சீல் வைக்கப்பட்ட பகுதியில் பென்னட் மார்க்கெட், முக்கோணம், கீழ் போகித்தெரு, நகராட்சி லைன், ரோகிணி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் மருந்தகங்கள், ரேஷன் கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.

அப்பகுதியில் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வெளியே இருந்து யாரும் உள்ளே செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடு, வீடாக சென்று வழங்க தன்னார்வலர்கள் அடங்கிய 7 குழுக்கள் அமைக்கப்பட்டன.

போராட்டம்

இதற்கிடையே நேற்று கீழ் போகித்தெரு, நகராட்சி லைன் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் அத்தியாவசிய பொருட்கள் வழங்கக்கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தன்னார்வலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதுகுறிப்பிட்ட சில பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் காய்கறிகள், மளிகை பொருட்கள் வழங்கப்படவில்லை. முக்கிய சாலைகளில் மட்டும் தூய்மை பணி நடைபெறுகிறது. மற்ற இடங்களில் நடைபெற வில்லை என்று குற்றம் சாட்டினர்.

கூட்டத்தை போலீசார் கலைத்தனர்

அந்த நேரத்தில் கலெக்டர் மக்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி வழங்கி கொண்டு இருந்ததால், போலீசார் கூட்டத்தை கலைத்தனர். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று போராடியதால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காணப்பட்டது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும்போது, ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்பட்டு உள்ளது. யாரேனும் நன்கொடையாக அளித்தால் காய்கறிகள் வீடு, வீடாக இலவசமாக வினியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற அதற்கான பணத்தை கொடுத்து தன்னார்வலர்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றனர். 

Next Story