மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,000 பேருக்கு கொரோனா - 26 பேர் பலி
மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,008 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 26 பேர் உயிரிழந்தனர்.
மும்பை,
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள ஆட்கொல்லி கொரோனா மராட்டியத்தை புரட்டி போட்டு உள்ளது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பை, புனே நகரங்களில் நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. கடந்த மார்ச் 9-ந் தேதி தான் முதல் முதலில் மராட்டியத்தில், புனேயை சேர்ந்த தம்பதிக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதையடுத்து 50 நாட்களில் இங்கு வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியிருந்தது.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் புதிதாக 1,008 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் தொற்று பாதிப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு மராட்டியம் புதிய உச்சத்தை அடைந்து உள்ளது. தற்போது மாநிலத்தில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 506 ஆக உயர்ந்து இருக்கிறது.
485 பேர் பலி
இதேபோல மாநிலத்தில் மேலும் 26 பேர் ஆட்கொல்லி வைரசுக்கு பலி ஆகி உள்ளனர். இதனால் இங்கு பலியானவர்கள் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை மாநிலத்தில் 1,879 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
மாநிலம் முழுவதும் தற்போது 1 லட்சத்து 63 ஆயிரத்து 26 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 11 ஆயிரத்து 677 பேர் தனிமை மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். இதேபோல மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 53 ஆயிரத்து 125 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மும்பையில்...
இதேபோல மும்பை மாநகராட்சி பகுதியில் நேற்று புதிதாக 751 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இங்கு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 625 ஆகி உள்ளது. மேலும் 5 பேர் பலியாகி உள்ளனர். இதனால் நிதிதலைநகரில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்து உள்ளது.
மும்பையில் நேற்று மட்டும் 95 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் இங்கு 1,567 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர்.
Related Tags :
Next Story