வெளிமாநிலம், பிறமாவட்டங்களில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை


வெளிமாநிலம், பிறமாவட்டங்களில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 2 May 2020 10:23 AM IST (Updated: 2 May 2020 10:23 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாநிலம், பிறமாவட்டங்களில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 14 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா பாதிக்கப்பட்ட 21 நபர்கள் வசித்த வேலூர் சைதாப்பேட்டை, கஸ்பா உள்ளிட்ட 6 பகுதிகள் சீல் வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்காரணமாக மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது.

இந்த நிலையில் வெளிமாநிலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனால் வெளிமாநிலங்களில் தங்கியுள்ள வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மாவட்ட எல்லையில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா பரிசோதனை

அதன்படி வேலூர் மாவட்ட எல்லையான பூட்டுத்தாக்கு, வல்லம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, திருவலம், கீரைசாத்து, தெங்கால், முத்தரசிகுப்பம், பரதராமி, சைனகுண்டா, மாதனூர், பத்தலப்பள்ளி, அழிஞ்சிகுப்பம், ஓணாங்குட்டை ஆகிய 14 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு டாக்டர்கள், சுகாதாரத்துறையினர், காவல்துறையினர், வருவாய்துறையினர் அடங்கிய குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இக்குழுவினர் வெளிமாநிலங்கள் மற்றும் பிறமாவட்டங்களில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வரும் பொதுமக்களை கொரோனா பரிசோதனை செய்து அனுப்புகிறார்கள். கொரோனா அறிகுறி காணப்பட்டால் தனிமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் கிராம பகுதிகளில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து யாராவது வந்துள்ளார்களா என்று கண்காணிக்க வேண்டும். அப்படி வந்திருந்தால் அவர்கள் குறித்த விவரங்களை வேலூர் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை, வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். மேலும் வெளிமாநிலங்கள், பிறமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் தானாக முன்வந்து கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Next Story