ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 2 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா உறுதி


ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 2 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 3 May 2020 12:00 AM GMT (Updated: 2 May 2020 9:41 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 2 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 18 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த வாலிபர் நேற்று குணமானார். அவருடன் சேர்த்து 11 பேர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையின் பயனாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதம் உள்ள 7 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்த அவர்கள் 2 பேரும், அங்குள்ள தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு படை வீரராக பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இருவரும் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தனி ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.

இவர்கள் வசித்த பகுதிகள் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, உள்ளே யாரும் சென்றுவர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டு ரோந்து சுற்றி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் நோய்தொற்று பரவாமல் தடுக்க கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் அடுத்தடுத்து நோய்தொற்றுக்கு உள்ளாகி வருவது அந்த துறை அலுவலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமநாதபுரத்தில் பணியாற்றிய தீயணைப்பு வீரர் ஒருவர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது.

Next Story