தொற்று இல்லாத மாவட்டமான மறுநாளில் பரபரப்பு: போடியில் இட்லி விற்ற பெண்ணுக்கு கொரோனா


தொற்று இல்லாத மாவட்டமான மறுநாளில் பரபரப்பு: போடியில் இட்லி விற்ற பெண்ணுக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 May 2020 4:58 AM IST (Updated: 3 May 2020 4:58 AM IST)
t-max-icont-min-icon

போடியில் இட்லி விற்பனை செய்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறிய மறுநாளிலேயே மீண்டும் பரவியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி,

தேனி மாவட்டத்தில் மொத்தம் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. அவர்களில் போடியை சேர்ந்த பெண் ஒருவர் பலியாகி விட்டார். பாதிக்கப்பட்டவர்களில் 23 பேர் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள். மற்றவர்கள் அவர்களின் குடும்பத்தினர். பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 42 பேரும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.

கடைசியாக நேற்று முன்தினம் 5 பேர் வீடு திரும்பினர். இதனால், தேனி மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக நேற்று முன்தினம் பிற்பகலில் மாறியது. சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு தேனி மாவட்டம் முன்னேற்றம் அடைந்தது. மேலும் சில நாட்கள் கொரோனா தொற்று இல்லாவிட்டால் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலத்துக்கு முன்னேற்றம் அடையும் என்றஎதிர்பார்ப்பு இருந்தது.

போடி பெண்

மேலும் கொரோனா பரவாமல் இருந்தால் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கடைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று போடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயது 50. அவர் போடியில் இட்லி கடை நடத்தி வருகிறார். ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக கடையை திறக்க முடியாததால், தனது வீட்டில் இருந்து இட்லியை பார்சல் செய்து அப்பகுதிகளில் விற்பனை செய்து வந்தார்.

ஏற்கனவே கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்றவர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் இந்த பெண் வசிக்கிறார். அப்பகுதியில் சமூக பரவல் உள்ளதா? என கண்டறிய கடந்த 4 நாட் களாக வீடு, வீடாக சென்று சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இந்த பெண் உள்பட பலருக்கு சளி, ரத்தம் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அந்த பெண்ணுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

பட்டியல் சேகரிப்பு

பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவரிடம் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ஏற்கனவே பாதிப்புக்குள்ளான நபர்களின் வீடுகளுக்கு சென்று கடந்த 20 நாட்களுக்கு முன்பு இட்லி பார்சல் வழங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இட்லி விற்பனை செய்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் வந்து பலர் இட்லி வாங்கிச் சென்றுள்ளனர். சிலர் வீட்டு முன்பு நின்று சாப்பிட்டுச் சென்றுள்ளனர். இதனால் அவருடைய வீட்டுக்கு இட்லி சாப்பிட வந்தவர்கள் யார்? அவர் யார் வீட்டுக்கெல்லாம் இட்லி கொண்டு வழங்கினார்? என்பது குறித்த பட்டியலை போலீசாரும், சுகாதாரத்துறையினரும் இணைந்து சேகரித்து வருகின்றனர். அவ்வாறு தொடர்புடைய 30-க்கும் மேற்பட்டவர்களின் சளி மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story