ராணிப்பேட்டை அருகே பயங்கரம்: பெல் அதிகாரி கத்தியால் குத்தி கொலை மனைவி கைது


ராணிப்பேட்டை அருகே பயங்கரம்: பெல் அதிகாரி கத்தியால் குத்தி கொலை மனைவி கைது
x
தினத்தந்தி 3 May 2020 4:02 AM GMT (Updated: 2020-05-03T09:32:50+05:30)

ராணிப்பேட்டை அருகே பெல் அதிகாரி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரது மனைவி கைது செய்யப்பட்டார்.

சிப்காட்(ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை அருகே உள்ள பெல் தொழிற்சாலையில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வந்தவர் அகிலேஷ்குமார் (வயது 37). இவர், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருடைய மனைவி ஆஷாகுமாரி (27). இவர்களுக்கு அயோக்குமார் (5) என்ற ஒரே மகன் உள்ளான். இவர்கள், பெல் ஊரகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தனர்.

மகன் அயோக்குமார் சரியாக சாப்பிடவில்லை என்ற கோபத்தில் கணவன், மனைவிக்கு இடையே நேற்று மதியம் தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆத்திரம் அடைந்த ஆஷாகுமாரி வீட்டில் காய்கறிகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் கத்தியால் அகிலேஷ்குமாரை குத்தினார்.

அதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெல் தொழிற்சாலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அகிலேஷ்குமார் இறந்து விட்டார்.

கைது

தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆஷாகுமாரியை கைது செய்தனர். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை பெல் பகுதியில் மனைவியே கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story