பள்ளி வாகனங்களின் முடிவுற்ற தகுதி சான்றை ஒரு வருடம் நீட்டிக்க வேண்டும்: அரசுக்கு தனியார் பள்ளி கூட்டமைப்பு கோரிக்கை


பள்ளி வாகனங்களின் முடிவுற்ற தகுதி சான்றை ஒரு வருடம் நீட்டிக்க வேண்டும்: அரசுக்கு தனியார் பள்ளி கூட்டமைப்பு கோரிக்கை
x
தினத்தந்தி 4 May 2020 4:45 AM IST (Updated: 4 May 2020 2:11 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு காலத்தில் பள்ளி வாகனங்களின் முடிவுற்ற தகுதி சான்றை ஒரு வருட காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு தனியார் பள்ளி கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தர்மபுரி, 

தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டி.என்.சி.இளங்கோவன் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி உள்ளதாவது:-

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதனை தடுக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை பிறப்பித்துள்ளன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமூக பரவலாக மாறாத வகையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பாராட்டுகிறது.

தமிழக அரசு பிறப்பித்துள்ள அனைத்து உத்தரவுகளையும் நாங்கள் பின்பற்றி வருகிறோம். கடந்த 24.3.2020 முதல் பள்ளிகள் இயங்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஊரடங்கு காலத்தில் பள்ளி வாகனங்களின் முடிவுற்ற தகுதி சான்றை பள்ளி வாகனங்கள் இயங்க முடியாத காரணத்தினால் ஒருவருட காலத்திற்கு நீட்டித்து ஆணை வழங்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணங்களை மின்வாரியம் பிப்ரவரி மாத கணக்கீட்டின்படி செலுத்த அறிவுறுத்தி உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் இயங்க முடியாத காரணத்தினால் குறைந்த அளவே மின் பயன்பாடு உள்ளது. இதனால் பள்ளிகளில் உள்ள மின் கணக்கீட்டின்படி இந்த ஊரடங்கு நாட்களுக்குரிய மின் கட்டணங்களை பள்ளிகள் செலுத்தும் வகையில் தமிழக அரசு ஆணை வழங்க வேண்டும்.

கடந்த 2019-2020-ம் கல்வியாண்டிற்கு பள்ளிகளுக்கு பெற்றோர்களிடமிருந்து வரவேண்டிய கல்வி கட்டணங்கள் சுமார் 25 சதவீதம் நிலுவையில் உள்ளது. இருப்பினும் இந்த ஊரடங்கு காலத்தில் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் நலன் கருதி அனைத்து தனியார் பள்ளிகளும் மார்ச் மாதத்திற்கான ஊதியத்தை முழுவதுமாக வழங்கி விட்டனர். இதனிடையே கடந்த கல்வியாண்டு மற்றும் இந்த கல்வியாண்டிற்கான கல்வி கட்டணங்களை வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ஏப்ரல் மாதத்திற்குரிய ஊதியம் கொடுக்க முடியாத நிலை பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் அரசிடம் இருந்து 2018-2019-ம் ஆண்டிற்கான அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கல்வி கட்டணம் மே மாதம் முதல் வாரத்தில் பள்ளிகளுக்கு கிடைத்தாலும் அது குறைந்த அளவிலான தொகையாக இருப்பதால் ஊழியர்களுக்கு சம்பளத்தை முழுவதுமாக வழங்க இயலாத நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் சிரமங்களையும், நலனையும் கருத்தில் கொண்டு கல்வி கட்டணங்களை கட்டும் தகுதி படைத்த மற்றும் விருப்பமுள்ள பெற்றோர்களிடமிருந்து கல்வி கட்டணங்களை பெற்றுக்கொள்ள அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் திருத்தம் செய்து வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story