ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 30 நாட்கள் வாடகையின்றி விளைபொருட்களை சேமிக்கலாம்: கலெக்டர் மெகராஜ் தகவல்
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை 30 நாட்கள் வாடகை எதுவும் இன்றி சேமித்து வைக்கலாம் என கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்,
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை 30 நாட்கள் வாடகை எதுவும் இன்றி சேமித்து வைக்கலாம் என கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களை எவ்வித பிடித்தங்களும் இன்றி நியாயமான விலைக்கு விற்பனை செய்வதற்கு ஏதுவாக தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், நாமக்கல், சோளக்காடு, பரமத்திவேலூர் மற்றும் திருச்செங்கோடு ஆகிய 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 8 ஆயிரம் டன் விளைபொருட்கள் இருப்பு வைக்கும் அளவிற்கு 10 கிட்டங்கிகள் பயன்பாட்டில் உள்ளன. கிட்டங்கிகளில் 30 நாட்கள் வரை வாடகை கட்டணம் ஏதுமில்லாமல் விளை பொருட்களை சேமித்து பயன்பெறலாம்.
மேலும் நாமக்கல் மாவட்டத்தில் நாமகிரிப்பேட்டை, பரமத்திவேலூர் மற்றும் திருச்செங்கோடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 25 டன் கொள்ளளவு கொண்ட 3 குளிர்பதன கிடங்குகள் உள்ளன. இக்குளிர்பதன கிடங்குகளில் விவசாயிகள் எந்தவித கட்டணமும் இன்றி தங்களது காய்கறிகள் மற்றும் பழங்களை இருப்பு வைத்துக்கொண்டு பின்னர் விற்பனை செய்யலாம்.
மேலும் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை 5 சதவீத வட்டி விகிதத்திலும், வியாபாரிகளுக்கு ரூ.2 லட்சம் வரை 9 சதவீத வட்டி விகிதத்திலும் பொருளட்டு கடன் விற்பனைக்குழு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் முதல் 30 நாட்களுக்கு வட்டி செலுத்த தேவையில்லை எனவும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரமத்திவேலூர் தேசிய வேளாண் சந்தை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் மற்றும் ஆமணக்கு போன்ற விளைபொருட்கள் ஏலம் புதன்கிழமை அன்றும், கொப்பரை தேங்காய் பருப்பு போன்ற வேளாண் விளைபொருட்கள் பிரதிவாரம் வியாழக்கிழமை தோறும் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து வசதிகளையும் விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story