தந்தையின் இறுதி சடங்கிற்கு செல்ல இளம்பெண்ணுக்கு அனுமதி மறுப்பு கூடுதல் கலெக்டருடன் எம்.எல்.ஏ. வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


தந்தையின் இறுதி சடங்கிற்கு செல்ல இளம்பெண்ணுக்கு அனுமதி மறுப்பு கூடுதல் கலெக்டருடன் எம்.எல்.ஏ. வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 May 2020 3:46 AM IST (Updated: 4 May 2020 3:46 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் இறந்த தந்தையின் இறுதி சடங்கிற்கு செல்ல இளம்பெண்ணுக்கு அனுமதி பாஸ் வழங்க மறுக்கப்பட்டது. இதனால் கூடுதல் கலெக்டருடன் எம்.எல்.ஏ. வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கோட்டமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் அருண். இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகா மாநிலம் ஷிவமுகா மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் மகள் லாவண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் வெங்கடேஷ் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலை இறந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக கர்நாடகா மாநிலம் செல்ல லாவண்யா, தனது கணவர் மூலம் நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இ-பாஸ் மூலம் விண்ணப்பித்திருந்தார்.

ஆனால் விண்ணப்பித்து 24 மணி நேரம் ஆகியும் அனுமதி கடிதம் கிடைக்கவில்லை. இதனால் அருண், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ-பாஸ் மையத்தை அணுகி அனுமதி பாஸ் கிடைக்காதது குறித்து கேட்டுள்ளார்.

வாக்குவாதம்

அதற்கு அங்கிருந்த அதிகாரிகள், பிற மாநிலங்களுக்கு செல்ல பாஸ் வழங்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது. உடனே அருணும், லாவண்யாவும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடியை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து கூறி கதறி அழுதுள்ளனர். இதனால் பொன்முடி எம்.எல்.ஏ., இ-பாஸ் மையத்தை தொடர்பு கொண்டு கர்நாடகா மாநிலம் செல்ல அனுமதி வழங்க கேட்டுள்ளார். அதற்கும் அதிகாரிகள் பாஸ் வழங்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.

இதனால் பொன்முடி எம்.எல்.ஏ., விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் சென்று அங்கிருந்த கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்கிடம், இறந்தவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வெளிமாநிலம் செல்ல ஏன் பாஸ் வழங்கவில்லை என்று கேட்டார். அதற்கு அவர் சட்டத்திற்கு உட்பட்டு தான் பாஸ் வழங்கவில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் பொன்முடி எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பரபரப்பு

பின்னர் 20 நிமிடங்களில் இ-பாஸ் மையம் மூலம் லாவண்யாவுக்கு அனுமதி பாஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து பொன்முடி எம்.எல்.ஏ. கூறுகையில், இறந்தவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வெளியூர் செல்ல அனுமதி பாஸ் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் விழுப்புரத்தில் இ-பாஸ் மையத்தில் விண்ணப்பித்த நபருக்கு அனுமதி பாஸ் வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.

அதனால் தான் நான் நேரில் வந்தேன். மாவட்ட நிர்வாகம் கொரோனா குறித்து உண்மையான தகவலை தெரிவிக்க மறுக்கிறது என்றார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story