முதுமலையில் குட்டியானையை புலி அடித்து கொன்றது உடல் அருகில் தாய் யானை பாசப்போராட்டம்


முதுமலையில் குட்டியானையை புலி அடித்து கொன்றது உடல் அருகில் தாய் யானை பாசப்போராட்டம்
x
தினத்தந்தி 4 May 2020 4:41 AM IST (Updated: 4 May 2020 4:41 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் குட்டியானையை புலி அடித்து கொன்றது. அதன் உடல் அருகில் தாய் யானை பாசப்போராட்டம் நடத்தியது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு வனச்சரகத்தில் நேற்று முன்தினம் மாலை வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சிக்கட்டி பகுதியில் காட்டுயானை ஒன்று நின்றிருந்தது. மேலும் அதன் அருகில் இறந்த குட்டியானையின் உடல் கிடந்தது. இதன் மூலம் இறந்த குட்டியானையின் உடல் அருகில் தாய் யானை பாசப்போராட்டம் நடத்துவது தெரியவந்தது.

இதையடுத்து தாய் யானையை விரட்டிவிட்டு குட்டியானையின் உடலை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு தாய் யானை அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் குட்டியானையின் உடலை மீட்டனர். அப்போது குட்டியானையின் உடலில் பல இடங்களில் புலி கடித்து குதறிய காயங்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அதே பகுதியில் உள்ள வேட்டை தடுப்பு காவலர்கள் முகாமுக்கு குட்டியானையின் உடலை கொண்டு சென்றனர். அங்கு முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகபிரியா நேரில் வந்து பார்வையிட்டார்.

புலி அடித்து...

பின்னர் கால்நடை டாக்டர் கோசலன் வரவழைக்கப்பட்டு, குட்டியானையின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது குட்டியானையை புலி அடித்து கொன்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து முதுமலை தெப்பக்காடு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து வனச்சரகர் ராஜேந்திரன் கூறும்போது, இறந்தது 3 மாத ஆண் குட்டியானை ஆகும். குட்டியானையின் உடலில் இருந்து நோய் தொற்று பரவி விடக்கூடாது என்பதற்காக தாய் யானையை விரட்டப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குட்டியானையை புலி தாக்கி உள்ளது. இதனால் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, ரத்தம் அதிகளவு வெளியேறி உள்ளது. அதன்பிறகு உடல் நிலை மிகவும் மோசமானதால் குட்டியானை இறந்து உள்ளது என்றார்.

Next Story