ராமேசுவரம் அருகே பரிதாபம்: வீட்டில் தனியாக இருந்த போது பிரசவித்த பெண் சாவு; குழந்தையும் இறந்தது


ராமேசுவரம் அருகே பரிதாபம்: வீட்டில் தனியாக இருந்த போது பிரசவித்த பெண் சாவு; குழந்தையும் இறந்தது
x
தினத்தந்தி 4 May 2020 4:45 AM IST (Updated: 4 May 2020 4:45 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் அருகே வீட்டில் தனியாக இருந்த போது பிரசவித்த பெண் பரிதாபமாக இறந்தார். பிறந்த குழந்தை உயிரிழந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

ராமேசுவரம்,

ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே உள்ள நடராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் தெய்வேந்திரன் (வயது 32). அவருடைய மனைவி ரஞ்சனி (29). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, தற்போது 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ரஞ்சனி மீண்டும் கர்ப்பமாகி நிறைமாத கர்ப்பிணியாக வீட்டில் இருந்தார்.

நேற்று முன்தினம் தெய்வேந்திரன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றிருந்த நிலையில், தனியாக இருந்த ரஞ்சனிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு வீட்டிலேயே குழந்தை பிறந்தது. ஆனால் பிறக்கும் போதே அந்த குழந்தை இறந்து விட்டதால் ரஞ்சனி அதனை ஒரு துணியில் சுற்றி வைத்துள்ளார்.

மேலும் அவருக்கு ரத்தப்போக்கு அதிகமானதை தொடர்ந்து சோர்வடைந்து விட்டாராம். இதனையறிந்த அவருடைய மாமனார் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனே அந்த பெண் 108 ஆம்புலன்சு மூலம் ரஞ்சனியை ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது உடல் நிலை மோசமாக உள்ளதை அறிந்து மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் கொண்டு செல்லும் வழியில் ரஞ்சனி பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து அவரது உடல் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ராமேசுவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகராணி, சப்-இன்ஸ்பெக்டர் நல்லுச்சாமி மற்றும் போலீசார் தெய்வேந்திரனின் வீட்டிற்கு சென்று அங்கு துணியில் சுற்றப்பட்டிருந்த குழந்தையின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் திருமணமாகி 5 ஆண்டுகளில் ரஞ்சனி இறந்துள்ளதால் இது தொடர்பாக ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுகபுத்ரா மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Next Story