கடலூரை சேர்ந்தவர்கள் பாகூர் வருவதை தடுக்க சோரியாங்குப்பம் ஆற்றங்கரை பாதை துண்டிப்பு


கடலூரை சேர்ந்தவர்கள் பாகூர் வருவதை தடுக்க சோரியாங்குப்பம் ஆற்றங்கரை பாதை துண்டிப்பு
x
தினத்தந்தி 4 May 2020 12:05 AM GMT (Updated: 2020-05-04T05:35:43+05:30)

கடலூரை சேர்ந்தவர்கள் பாகூர் பகுதிக்கு வருவதை தடுக்க தென்பெண்ணை ஆற்றங்கரை பாதையை போலீசார் பள்ளம் தோண்டி துண்டித்தனர்.

பாகூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் முடிவதாக இருந்த ஊரடங்கு மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. புதுவை மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாததால் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பல்வேறு பணிகளுக்காக புதுவை வரும்போது இங்கு நோய் தொற்று ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதை தடுக்க மாநில நுழைவு வாயில்கள் மூடப்பட்டு, போலீசார், மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தடுப்பு வேலி

இந்த நிலையில் மாநில எல்லையில் உள்ள கிராமங்கள் வழியாக தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் புதுவைக்கு வந்து செல்கின்றனர். இதை தடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி கடலூரை சேர்ந்தவர்கள் பாகூர் பகுதியில் நுழையாமல் தடுக்க சோரியாங்குப்பம், குருவிநத்தம், கொமந்தான்மேடு ஆகிய கிராமங்களில் போலீசார் தடுப்பு வேலி அமைத்துள்ளனர்.

ஆனால் கடலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் இரு மாநில எல்லையில் அமைந்துள்ள தென்பெண்ணை ஆற்றங்கரை வழியாக புதிய பாதையை அமைத்து பாகூர் பகுதிக்கு வந்து சென்றனர். இதனை முற்றிலுமாக தடுக்கும் வகையில் சோரியாங்குப்பம் மற்றும் நத்தப்பட்டு ஆற்றங்கரையோர பாதையை துண்டிக்க போலீசார் முடிவு செய்தனர்.

பாதை துண்டிப்பு

அதன்படி பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் ஆற்றங்கரை பாதையின் குறுக்கே பள்ளம் தோண்டி, தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பாகூர் பகுதிக்கு கடலூரை சேர்ந்தவர்கள் வருவது தடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story