ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வால் தர்மபுரி மாவட்டத்தில் ஓட்டல், கடைகள் திறக்கப்பட்டன
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வால் தர்மபுரி மாவட்டத்தில் ஓட்டல்கள், கடைகள் திறக்கப்பட்டன. இதனால் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 3-வது கட்டமாக ஊரடங்கு வருகிற 17-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஊரடங்குக்கான கட்டுப்பாடுகளில் சில தளர்த்தப்பட்டன. கொரோனா நோய்தொற்று குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டல பகுதியில் தர்மபுரி மாவட்டம் உள்ளது.
இதன்காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முதல் கட்டுமான பணிகளுக்கு தேவையான இரும்பு, சிமெண்டு, பெயிண்டு, மின்சாதன பொருட்கள் விற்பனை கடைகள், கண் கண்ணாடி விற்பனை, பழுது நீக்கும் கடைகள், செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், புத்தக கடைகள் ஆகியவற்றை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இவற்றில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. இந்த கடைகளுக்கு சென்றவர்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.
தர்மபுரி நகரில் ஊரடங்கு காலத்தில் திறக்கப்படாமல் இருந்த பல ஓட்டல்கள் மற்றும் மெஸ்கள் நேற்று திறக்கப்பட்டன. அங்கு உணவு வாங்க வந்தவர்களுக்கு பார்சல் மட்டும் வழங்கப்பட்டது. சில ஓட்டல்கள், மெஸ்கள் முன்பு வழக்கத்தை விட அதிக கூட்டம் காணப்பட்டது. தர்மபுரி நகரில் நேற்று காலை முதலே சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்தது. முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வந்தன.
தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வால் கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் சாலைகளில் அணிவகுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்களில் பெரும்பாலானோர் முககவசங்களை அணிந்து இருந்தனர். ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், முககவசம் அணியாமல் சென்றவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்தனர். இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கட்டிட கட்டுமான பணிகள் தொடங்கின. கட்டிட தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் பணிகளில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான செல்போன் கடைகள் திறந்து இருந்தன. போலீசார் இந்த கடைகளை மூடுமாறு அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story