கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களால் தொற்று அதிகரிப்பு கடலூரில் புதிதாக 108 பேருக்கு கொரோனா


கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களால் தொற்று அதிகரிப்பு கடலூரில் புதிதாக 108 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 May 2020 9:53 PM GMT (Updated: 2020-05-05T03:23:10+05:30)

கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களால் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது. இதில் கடலூரில் புதிதாக 108 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது.

கடலூர்,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

நோய்த்தொற்று அதிகரிப்பு

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா நோய்க் கிருமி பரவுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. நோய்த்தொற்று பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த மாதம்(ஏப்ரல்) 3-ந் தேதி அன்று முதல்முதலாக பண்ருட்டி, பரங்கிப்பேட்டையை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, நெல்லிக்குப்பம், கடலூர் ஆகிய பகுதிகளிலும் கொரோனாவால் சிலர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதன்படி கடந்த 30-ந் தேதி நிலவரப்படி கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் அனைவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 26 பேர் பூரண குணமடைந்து, தங்களது வீடுகளுக்கு திரும்பினர். இது மாவட்ட மக்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

ரத்த மாதிரிகள் பரிசோதனை

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு 903 பேர் வந்தனர். இதில் 699 பேர் சுகாதாரத்துறையினரால் அடையாளம் காணப்பட்டு, அவர்களை தொழுதூரில் உள்ள தனியார் கல்லூரி, விருத்தாசலம் அரசு கல்லூரி மற்றும் மாணவர் விடுதி, வேப்பூரில் உள்ள தனியார் பள்ளி உள்பட 9 இடங்களில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

அவர்களுக்கு சத்தான உணவு கொடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதற்கிடையில் அவர்களிடம் இருந்து உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் வந்த நாள் முதல் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. ஆம், கடந்த 2-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்தது.

நேற்று முன்தினம் வரை கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் 53 பேர் பாதிக்கப்பட்டனர்.

108 பேருக்கு உறுதி

இதற்கிடையில் நேற்று காலை மீண்டும் பரிசோதனை முடிவுகள் வரப்பெற்றது. இதில் ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்கள் என்பது தெரிந்தது.

இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்தது. இவர்கள் அனைவரும் விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி ஆகிய தாலுகா பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த கிராமங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அந்த கிராம மக்கள் வெளியே செல்லாத வகையிலும், வெளிநபர்கள் அந்த கிராமங்களுக்குள் நுழையாமல் இருப்பதற்காகவும் பிரதான சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

இது தவிர கடலூர் அரசு மருத்துவமனையில் 45 பேர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 10 பேர், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 3 பேர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 பேர் என 89 பேர் கொரோனா அறிகுறிகளுடன் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 931 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 4 ஆயிரத்து 341 பேருக்கு பாதிப்பு இல்லை. 430 பேருக்கு முடிவுகள் வரவில்லை. இதற்கிடையில் நேற்று கொரோனா உறுதியான 107 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், ஒருவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்றார். கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களில் 129 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பலருக்கு பரிசோதனை முடிவு வராததால், தொற்று பாதிப்போரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

விழுப்புரம்

இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து வந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் நேற்று முன்தினம் மேலும் 33 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இவர்கள் 37 பேரும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களோடு சேர்த்து நேற்று முன்தினம் வரை விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86 ஆக இருந்தது.

49 பேருக்கு பாதிப்பு

இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெற்றது. இவர்களில் திண்டிவனம் தாலுகா பாதிராப்புலியூரை சேர்ந்த 12 பேருக்கும், ஆசூரை சேர்ந்த 7 பேருக்கும், ரெட்டணை கிராமத்தை சேர்ந்த 3 பேருக்கும், மேல்பாக்கத்தை சேர்ந்த 3 பேருக்கும், கொள்ளாரை சேர்ந்த 3 பேருக்கும், திண்டிவனம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த 3 பேருக்கும், திண்டிவனம் வைரபுரத்தை சேர்ந்த 3 பேருக்கும், விழுக்கத்தை சேர்ந்த 3 பேருக்கும், தேவனூரை சேர்ந்த ஒருவருக்கும், வானூர் தாலுகா புளிச்சப்பள்ளத்தை சேர்ந்த ஒருவருக்கும், நாரசிங்கனூரை சேர்ந்த ஒருவருக்கும், விக்கிரவாண்டி தாலுகா கொரளூரை சேர்ந்த 2 பேருக்கும், கப்பியாம்புலியூரை சேர்ந்த 2 பேருக்கும், விழுப்புரம் தாலுகா கலிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த 3 பேருக்கும், தாரணிப்பாக்கத்தை சேர்ந்த ஒருவருக்கும், மோட்சகுளத்தை சேர்ந்த ஒருவருக்கும் ஆக மொத்தம் நேற்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவருமே கோயம்பேடு சந்தையில் வேலை செய்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 49 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

135 ஆக உயர்ந்தது

இவர்களை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனால் பாதிக்கப்பட்ட 49 பேர் வசிக்கும் கிராமங்களை தடை செய்யப்பட்ட கிராமங்களாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இந்த கிராமங்களில் இருக்கும் மக்கள் வெளியே எங்கும் செல்லாமல் இருக்கும் வகையில் கிராமங்களின் பிரதான சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த கிராமங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story